சாலையில் நடந்து சென்ற மாணவியின் செயின் பறிப்பு

சென்னை அண்ணாநகர் கிழக்கு பள்ளியரசன் தெருவைச் சேர்ந்த மலர் விழி ( வயது 40) கடந்த 24-ம் தேதி இரவு தனது 10-ம் வகுப்பு படிக்கும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் ஓட்டலுக்கு சென்றார். அதே பகுதி கெனால் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர், திடீரென மாணவியின் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் செயினை பறித்து தப்பிச் சென்றார்.

இது குறித்து மலர்விழி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

சிசிடிவியில் சிக்கிய இளைஞர்

கொள்ளையன் முகமூடி அணிந்திருந்ததுடன், பயன்படுத்திய இருசக்கர வாகனத்தில் பதிவெண் இல்லாததால் விசாரணையின் ஆரம்பத்தில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் , கொள்ளையன் அணிந்திருந்த சட்டையில் வரிக் குதிரை படம் மற்றும் தனித்துவமான கோடு வடிவமைப்பு இருந்ததை போலீஸார் கவனித்தனர்.

அதையே முக்கிய தடயமாகக் கொண்டு, பல்வேறு சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக ஆய்வு செய்து, சந்தேக நபர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, புளியந்தோப்பு சாஸ்திரி நகரைச் சேர்ந்த சரவணன் ( வயது 24 ) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

காதலிக்கு ஐ - போன் பரிசு

அவரிடமிருந்து மாணவியிடம் பறிக்கப்பட்ட நகை மீட்கப்பட்டதுடன், குற்றச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில், சரவணன் அண்ணாசாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் துணிக்கடையில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வந்தது தெரிய வந்தது.

மேலும், தனது காதலியின் பிறந்த நாள் அடுத்த வாரம் வர இருந்ததால், அவருக்கு 'ஐபோன்' பரிசாக வழங்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்கு தேவையான பணம் இல்லாததால் நகை பறிப்பில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சரவணன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Source: Read Full Article