Ashta Varahi Swasini Pooja: சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற அஷ்ட வராஹி சுவாசினி பூஜையில், நடிகை நளினி பங்கேற்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

அஷ்ட வராஹி சுவாசினி பூஜை

அஷ்ட வராஹி சுவாசினி பூஜை என்பது வராஹி தேவியின் எட்டு விதமான வடிவங்களை வழிபட்டு, கன்னிப் பெண்களை சுவாசினியாக பாவித்து செய்யப்படும் சக்திவாய்ந்த வழிபாடாகும். இது எதிரிகளை வெல்லவும், திருஷ்டி நீங்கவும், சகல செல்வங்களும் பெறவும் ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. வாராஹி அம்மனை வணங்குவது வாழ்வில் விரைவான முன்னேற்றத்தைத் தரும் என கூறப்படுகிறது. பொதுவாக ஆனி/ஆடி மாதங்களில் (ஆஷாட மாதம்) வரும் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரையிலான 9 நாட்கள் வாராஹி வழிபாட்டிற்கு மிகவும் உகந்தவை. அந்த வகையில் நடப்பாண்டில், ஜூலை 15ம் தேதி முதல் ஜூலை 23ம் தேதி வரையிலான 9 நாட்கள் பல்வேறு இடங்களில் அஷ்ட வராஹி சுவாசினி பூஜை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வராஹியின் 8 வடிவங்கள்

ஆதி வாராஹி : மூல சக்தியாக விளங்கும் வடிவம்

ஸ்வப்ன வாராஹி: கனவுகளின் மூலம் எதிர்காலத்தை உணர்த்துபவள்

மகிஷாரூட வாராஹி: எருமை வாகனத்தின் மீது அமர்ந்து காட்சி தருபவள்

லகு வாராஹி : எளிமையான வழிபாட்டிற்கு உகந்த சாந்தமான வடிவம்

சொப்ன வாராஹி / அஸ்வாரூட வாராஹி: குதிரை வாகனத்தில் அமர்ந்த கோலம்

சிம்ஹாரூட வாராஹி : சிங்க வாகனத்தின் மீது வீற்றிருப்பவள்

உன்மத்த வாராஹி: தீய சக்திகளை அழித்து, பக்தர்களின் பயத்தைப் போக்குபவள்

மகா வாராஹி / சுத வாராஹி (Maha Varahi): சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் முழுமையான வடிவம்

வழிபடும் முறை

சுமங்கலிப் பெண்களை அம்பிகையின் வடிவமாக பாவித்து, அவர்களது பாதங்களைக் கழுவி, குங்குமம், மஞ்சள், புத்தாடை மற்றும் பழங்கள் வழங்கி மரியாதை செய்வது இந்த வழிபாட்டின் முக்கிய அம்சமாகும். பூஜையின் போது மிளகு கலந்த சாதம், தயிர் சாதம், சுண்டல், கிழங்கு வகைகள் (உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு) மற்றும் மாதுளை பழங்கள் அம்மனுக்கு படைக்கலாம். செவ்வந்தி, சாமந்தி மற்றும் சிவப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அஷ்டவராஹி சக்தி பீடத்தை நிறுவி, தர்மேஸ்வர சுவாமிகள் என்பவர் 20 வருடங்களாக வராஹி உபாசனைகளை வழங்கி வருவதோடு, கோயில் கட்டி குடமுழுக்கு செய்து விஷேச பூஜைகளையும் செய்து வருகிறார். இங்கு ஆஷாட நவராத்திரி என்பது மிகவும் விஷேஷமாக கொண்டாடப்படுகிறது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று அம்மனின் அருள் பெறுவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற பெண்களை தெய்வமாக பாவித்து வழிபடும் சுவாசினி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். குறிப்பாக நடிகை நளினியும் இதில் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார். அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டதோடு, வராஹி அம்மன் தொடர்பான தனது கருத்துகளையும் ,நம்பிக்கையையும் பக்தர்களிடயே எடுத்துரைத்தார். சுவாசினி பூஜை மட்டுமின்றி வராஹி அம்மனுக்கு உகந்த நாட்களில் பல சிறப்பு பூஜைகளும் இந்த கோயிலில் மேற்கொள்ளப்படுகின்றன.

Source: Read Full Article