இளம்பெண்ணை வழி மறித்த இளைஞர்

சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் திருமணமான 22 வயது பெண் கடந்த 12 ம் தேதியன்று அண்ணாநகர் , 5 - வது அவென்யூவில் உள்ள ஓட்டல் அருகே நடந்து சென்று கொண்டிருந்து போது , அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் பெண்ணை வழி மறித்து வேலைக்கு ஆள் தேவைப்படுகிறது விருப்பம் உள்ளதா என கேட்டுள்ளார்.

அப்பெண்ணும் சம்மதித்து அவர் கூறிய அண்ணா நகர், 2 - வது அவென்யூவில் உள்ள ஒரு கடைக்கு மேல் அழைத்துச் சென்று மாடி மற்றும் மாடிப் படிகளை சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அப்போது மாடியை காட்டுகிறேன் என அழைத்துச் சென்று, அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்

உடனே அப்பெண் சத்தம் போடவே , அந்த நபர் தப்பிச் சென்றதாகவும் , பாலியல் சீண்டல் சம்பவத்தில் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் படி, பாதிக்கப்பட்ட அப்பெண் தனது கணவருடன் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

கொடுத்த புகார் மீது , பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து வழக்கில் தொடர்புடைய திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் ( வயது 37 ) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஆனந்தன் ஜிம் பயிற்சியாளர் மற்றும் பகுதி நேர கார் ஓட்டுநராக வேலை செய்து வருவது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஆனந்தன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Source: Read Full Article