3 மடங்கு லாபம் தருவதாக முதலீடு

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் நிறுவனம் மாநிலம் முழுவதும் 60,000-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.8,000 கோடி வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பலரிடம் பணம் பெற்று, அதை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து 3 மடங்கு லாபம் தருவதாக கூறி பலரை முதலீடு செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் நிறுவனம் செயலிழந்த நிலையில், அதன் நிர்வாகிகள் மீது விசாரணை நடைபெறுகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய வரும், நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பங்குதாரருமான சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் ( வயது 56), கடந்த 27-ம் தேதி தனது கார் ஓட்டுநர் ஷியாம் விக்னேஷ் ( வயது 30) உடன் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் பகுதிக்கு சென்றிருந்தார்.

அங்கு சாலையோரம் காரை நிறுத்திய சார்லஸ், எதிரே உள்ள வணிக வளாகத்தில் சில பொருட்கள் வாங்கி வருமாறு ஓட்டுநரிடம் கூறினார். ஓட்டுநர் 15 நிமிடங்கள் கழித்து வந்தபோது, சார்லஸைக் காணவில்லை. காரும் இல்லை. செல்போன் லைனும் கிடைக்கவில்லை.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

இதையடுத்து ஓட்டுநர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தாழம்பூர் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மற்றொரு காரில் வந்த நால்வர், அவரை அவரது காருடன் அழைத்துச் செல்வது பதிவாகி இருந்தது.

கடத்தல் கும்பல் 2 கார்களில் பிரிந்து பயணித்ததும், ஒரு கார் தென்காசி நோக்கியும் மற்றொரு கார் கோவை நோக்கியும் சென்றதும் தெரிந்தது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சார்லஸை தனிப்படை போலீஸார் மீட்டனர். அங்கு இருந்த தினேஷ் பாண்டின் ( வயது 34 ) கைது செய்யப்பட்டார்.

அவர் அளித்த தகவலின் பேரில், கோவையில் பதுங்கியிருந்த கருத்தபாண்டி ( வயது 24), ராமநாதபுரத்துக்கு தப்பிச் சென்ற தினேஷ்குமார் ( வயது 33), சபரி என்ற வேல் சபரி ( வயது 26) ஆகியோரையும் கைது செய்தனர்.

இந்த கும்பல், கடந்த 7 மாதங்களுக்கு முன்பே சார்லஸை மிரட்டி ரூ.1.40 கோடியை பறித்துள்ளது. அது தொடர்பாக சார்லஸ் புகார் அளிக்காததால், தற்போது அவரை ரூ.2 கோடி கேட்டு, மிரட்டி, கடத்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து 2 கார்களும், சார்லஸின் காரும் பறிமுதல் செய்யப்பட்டன.

Source: Read Full Article