திமுக ஆட்சி காலத்தில், மின்சார வாரியத்திற்காக மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனால், அப்போது மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதலில் முறைகேடு புகார்

கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அதாவது, திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், 25 kva முதல் 500 kva வரையிலான 45,000 டிரான்ஸ்ஃபார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் 397 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கத்தின் சார்பிலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இ. சரவணன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் சார்பிலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, டிரான்ஸ்ஃபார்மர்கள் கொள்முதல் முறைகேடு புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைகேடு புகார்கள் மீது புதிதாக விசாரணையை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பான ஆவணங்களை, லஞ்ச ஒழிப்புத்துறை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், அவ்வாறு ஆவணங்களை பெறும் சிபிஐ, விரைந்து விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். அதோடு, சிபிஐ நடத்தும் விசாரணைக்கு, மின்சார வாரியமும், லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

சிபிஐ வழக்குப் பதிவு

இதைத் தொடர்ந்து, டெண்டர் முறைகேடு புகாரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளது சிபிஐ.

முன்னதாக, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த, கடந்த ஏப்ரல் 29-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சிபிஐ விசாரணை உறுதியானது. தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி, சென்னையில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு, மின்வாரிய முன்னாள் அதிகாரிகள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

குற்றச்சாட்டு என்ன.?

திமுக ஆட்சி காலத்தில், 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்தபோது, மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பாக, 397 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மின்மாற்றிகளை வாங்கியதில் கூட்டு சதி செய்து, சந்தை விலையை விட அதிக விலைக்கு டெண்டர் விடப்பட்டதன் மூலம் அரசுக்கு இந்த 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

Source: Read Full Article