உள்ளாட்சி தேர்தலில் ஒரு மேயரை தமிழக வெற்றிக் கழகம் பெற்றால் ஒரு பக்கம் மீசையை எடுப்பேன் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆதவ் அர்ஜூனாவின் சபதம்

கடந்த ஜூன் 4ம் தேதி சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற பள்ளி திறக்கும் நிகழ்வில் அந்த தொகுதி எம்.எல்.ஏ., பல்லவி - சென்னை மேயர் பிரியா ராஜன் ஆகிய இருவருக்குமிடையே மோதல் உண்டானது. வேண்டுமென்றே மேயர் பிரியா, பல்லவியை அவமானப்படுத்தியதாக தவெகவினர் கொதித்தெழுந்தனர். இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக ஒரு மேயர் பதவியையாவது வெல்லட்டும். அப்போது 75 வருட திமுகவை யாராலும் அசைக்க முடியாது என ஒப்புக் கொள்கிறேன் என சபதம் எடுத்தார்.

ஆர்.எஸ்.பாரதி சவால்

இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தபோது ஆதவ் அர்ஜூனா கருத்து பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, இன்னும் 6 மாத காலத்தில் உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது. தமிழக வெற்றிக் கழகம் ஒரு மேயர் பதவியையாவது வென்றால் நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன். இந்த சவாலுக்கு தவெக தயாரா?.. தமிழ்நாட்டு மக்கள் தெரியாமல் தவெகவுக்கு ஓட்டு போட்டு விட்டதாக புலம்பி தவிக்கிறார்கள். என் வீட்டு பிள்ளைகள் மிரட்டுனாங்க, அழுதாங்க என காரணம் சொன்னார்கள்.

மேலும் மு.க.ஸ்டாலினுக்கோ, உதயநிதிக்கோ சவால் விடும் தகுதி ஆதவ் அர்ஜூனாவுக்கு கிடையாது. அவர் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என பதிலடி கொடுத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: இவரு சொல்லி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோமா? - ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சண்முகம்!

அமைச்சர் நிர்மல் குமாரின் ரியாக்‌ஷன்

இந்நிலையில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆர்.எஸ்.பாரதி விடுத்த சவால் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்ன பண்ண வேண்டும் தெரியாமல் தினமும் ஏதாவது பேச வேண்டும் என திமுக செயல்பட்டு வருகிறது. தவெக அரசு எப்படி செயல்பட்டு வருகிறது என்பது மக்கள் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் மீசை எடுப்பது எல்லாம் பெரிய விஷயமா?.. ஒரு ரேஸர் இருந்தால் அதற்கு போதுமானது. மீசை எடுப்பதற்கு இதை ஒரு காரணமாக சொல்கிறார். கண்டிப்பாக தமிழக வெற்றிக் கழகம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெறும். ஆர்.எஸ்.பாரதி மீசையை எடுக்க வேண்டும் என்றால் எடுக்கட்டும். வேண்டும் என்றால் வைத்துக் கொள்ளட்டும் என தெரிவித்துள்ளார்.

இதனால் மக்களுக்கு இப்போதே உள்ளாட்சி தேர்தல் மீதான ஆர்வம் ஏற்பட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் செயல்படும் நிலையில் இம்முறை யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source: Read Full Article