பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் 3 நாள் மாதவிடாய் விடுப்பு அளிக்கும் கேரள அரசின் திட்டத்தின்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

கேரள அரசு சமீபத்தில் பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை அறிவித்தது. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக அமைந்துள்ள இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ‘மாதவிடாய் கண்ணியம்’ என்ற கருத்தாக்கத்தை மையப்படுத்தி கல்வியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தீவிரமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

முற்போக்கான முடிவு

பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் கடுமையான வயிற்று வலி, உடல் சோர்வு மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முற்போக்கான முடிவை அரசு எடுத்துள்ளது. இத்திட்டத்தின்படி, மாணவிகள் பருவத்தேர்வுகளை எழுதத் தேவையான குறைந்தபட்ச வருகைப்பதிவு சதவீதத்தில் சிறப்புத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் சமூகவியலாளர்கள், "இது மாணவிகளுக்கு வழங்கப்படும் வெறும் தளர்வு அல்ல; பெண்களின் இயற்கையான உடலியல் இயல்பை சமூகம் வெளிப்படையாக அங்கீகரிப்பதற்கான முதல் படியாகும்" என்கின்றனர். பல கிராமப்புற மற்றும் நகர்ப்புற பள்ளிகளில், மாதவிடாய் நாட்களில் கழிப்பறை வசதியின்மை, வலியால் மாணவிகள் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர். அரசின் இந்த அங்கீகாரம் அவர்களுக்குப் பாதுகாப்பான மனநிலையை உருவாக்கும். வலி நிறைந்த நாட்களில் ஓய்வு எடுப்பது அவர்களின் அடிப்படை உரிமை என்பதை இத்திட்டம் உறுதி செய்கிறது.

தனியுரிமையில் சிக்கல்

அதே சமயம், இந்தத் திட்டம் சில நடைமுறை விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. கல்வியாளர்கள் தரப்பில், "மாதந்தோறும் மூன்று நாட்கள் தொடர்ந்து விடுப்பு எடுப்பது மாணவிகளின் கற்றலைப் பாதிக்கக்கூடும். முக்கியப் பாடங்களைத் தவறவிட வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், விடுப்புக்காகத் தங்கள் மாதவிடாய் சுழற்சியை ஆசிரியர்களிடம் வெளிப்படையாகக் கூறுவது மாணவிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தலாம் என்றும், இது அவர்களைத் தனிமைப்படுத்திக் காட்டக்கூடும் என்றும் உளவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதற்கு பதிலாக பள்ளிகளில் சுகாதாரத்தை உறுதி செய்வது, நாப்கின் வழங்கல் இயந்திரத்தை நிறுவுவது ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article