கட்சி விரோத செயல்பாடுகள் புகார்: ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரையை ஏற்று நடவடிக்கை!
பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாகக் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் உட்கட்சிப் பூசல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் கௌரவத் தலைவராகச் செயல்பட்டு வந்த பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ ஜி.கே.மணி, கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடந்த 18.12.2025 அன்று அவருக்கு விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பியிருந்தது. கட்சியின் நலனுக்கும், தலைமைக்கும் எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், ஏன் உங்களைக் கட்சியிலிருந்து நீக்கக்கூடாது என ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், தமக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த பின்னரும், ஜி.கே.மணி தரப்பிலிருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் கூடிய பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இந்தப் பிரச்சினை குறித்துத் தீவிரமாக விவாதித்தது. கட்சித் தலைமையின் உத்தரவை மதிக்காமலும், விளக்கம் அளிக்காமலும் இருந்த ஜி.கே.மணியை கட்சியின் அமைப்பு விதி 30-இன் படி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கலாம் என ஒழுங்கு நடவடிக்கைக் குழு, கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்குப் பரிந்துரை செய்தது.
இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட அன்புமணி இராமதாஸ், ஜி.கே.மணி இன்று (26.12.2025) முதல் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். "கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணியுடன் பாமகவினர் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது" எனத் தொண்டர்களுக்குக் கட்சித் தலைமை கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சேலத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்குழுவிற்கு ஜி.கே.மணி ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், அன்புமணி தரப்பு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
