ஜபல்பூர் கொடூரம்: மதமாற்றக் குற்றச்சாட்டு கூறி பார்வையற்ற பெண்ணைத் தாக்கிய அஞ்சு பார்கவா!
மத்திய பிரதேச மாநிலத்தில், பாஜக பெண் நிர்வாகி ஒருவர், கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசியதோடு, அவரைத் தாக்கும் வகையிலும் நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹவா பாக் பகுதியில் உள்ள ஒரு தேவாலய வளாகத்தில் ஜபல்பூர் நகர பாஜக துணைத் தலைவராகச் சமீபத்தில் நியமிக்கப்பட்ட அஞ்சு பார்கவா என்பவர், அங்கு நின்றிருந்த கண்பார்வையற்ற பெண் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்தப் பெண்ணை நோக்கி, "நீ மதமாற்றம் செய்யும் வேலை செய்கிறாயா?" என்று கத்திய அவர், ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணின் முகத்தைப் பிடித்துத் தள்ளியும், கைகளை முறுக்கியும் துன்புறுத்தியுள்ளார். பார்வையற்ற அந்தப் பெண், "என்னிடம் சரியாகப் பேசுங்கள், ஏன் என்மீது கை வைக்கிறீர்கள்?" என்று கேட்டபோதும், அஞ்சு பார்கவா அடங்கவில்லை. மாறாக, "நீ அடுத்த ஜென்மத்திலும் குருியாகத்தான் பிறப்பாய்" என்று அந்தப் பெண்ணின் மாற்றுத்திறனைக் கேலி செய்யும் வகையில் சாபமிட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கொடுமையின் உச்சமாக, இந்தச் சம்பவம் அனைத்தும் அங்கு நின்றிருந்த ஒரு காவலர் முன்னிலையிலேயே நடந்துள்ளது. அவர் இதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வீடியோவை சமூக வலைத்தளமான 'X'-ல் பகிர்ந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், "ஒரு மாற்றுத்திறனாளிப் பெண்ணிடம் இவ்வளவு குரூரமாக நடந்து கொள்வதுதான் பாஜகவில் பதவி உயர்வு பெறுவதற்கான எளிய வழியா?" என்று கடுமையாகச் சாடியுள்ளார்."இவர்கள் சமூகத்தின் கறைகள்" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
பார்வையற்ற தாக்கிய பெண்ணை வீடியோ!
यह औरत जो एक दृष्टिहीन लड़की के साथ मारपीट कर रही है वो जबलपुर में BJP की उप जिलाध्यक्ष अंजू भार्गव हैं
— Supriya Shrinate (@SupriyaShrinate) December 22, 2025
यह जाहिलियत और क्रूरता करना BJP में आगे बढ़ने का सबसे आसान तरीका है
धब्बे हैं यह लोग समाज पर
pic.twitter.com/tgsxjzhaLA
ஜபல்பூரில் சமீப காலமாக கிறிஸ்தவ மதமாற்றக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இந்துத்துவா அமைப்பினர் தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. மதத்தின் பெயரால் ஒரு மாற்றுத்திறனாளிப் பெண்ணை, அதுவும் ஒரு பெண் நிர்வாகியே இவ்வளவு மோசமாக நடத்தியிருப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகி மீது கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
.jpg)