ஸ்ரீ பிரதாப வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மகா அபிஷேகம்; தஞ்சையில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!
மார்கழி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று அனுமன் ஜெயந்தி விழா தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தஞ்சாவூர் மேலராஜவீதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ‘மூலை ஆஞ்சநேயர்’ என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீ பிரதாப வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோவிலில், அதிகாலை முதலே பக்தர்கள் ‘கியூ’வில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, மூலவர் ஸ்ரீ பிரதாப வீர ஆஞ்சநேயருக்குத் திரவிய பொடி, மஞ்சள், சந்தனம், தயிர், பால் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனைப் திரவியங்களால் மகா அபிஷேகம் ‘ஜேஜே’வென நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு “ஜெய் அனுமான்” என முழக்கமிட்டு சுவாமியை வழிபட்டனர். அபிஷேகத்தின் போது ஆஞ்சநேயரின் திருமேனிக்குச் சாற்றப்பட்ட வெள்ளிக் கவசம் மற்றும் மலர் அலங்காரம் பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
உற்சவர் ஆஞ்சநேயர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விசேஷத் தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, தஞ்சையின் நான்கு ராஜ வீதிகளிலும் சுவாமி புறப்பாடு வீதி உலா நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த வீதியுலாவில், வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து ஆஞ்சநேயரை வழிபட்டனர். பாதுகாப்புப் பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், பக்தர்களுக்குத் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
