சென்னையில் செவிலியர்கள் கைது செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பணி நிரந்தரம் கோரி திமுக அரசுக்கு எதிராகத் திரண்ட வெள்ளை உடைப் போராளிகள்!
கோயம்புத்தூர்: சென்னையில் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய செவிலியர்களைக் காவல்துறை அராஜகமான முறையில் கைது செய்ததைக் கண்டித்து, இன்று கோவையில் ஒப்பந்தச் செவிலியர்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகத் திரண்ட அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த (தொகுப்பூதிய) செவிலியர்கள், தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தேர்தல் நேரத்தில் திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதோடு, நீதி கேட்டுக் குரல் கொடுப்பவர்களைச் சிறையில் அடைப்பதா? என ஆவேசமாகக் கேள்வி எழுப்பிய செவிலியர்களின் இந்தப் போராட்டம், மாவட்ட நிர்வாகத்தை நிலைகுலையச் செய்தது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி, தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைத்துச் செவிலியர்களையும் காலம் தாழ்த்தாமல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. மேலும், ரத்து செய்யப்பட்ட செவிலியர் கண்காணிப்பாளர் நிலை–3 பணியிடங்களை உடனடியாக மீண்டும் உருவாக்க வேண்டும் என்றும், எம்.ஆர்.பி. மூலம் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற டி.எம்.எஸ். முற்றுகைப் போராட்டத்தின் போது, சட்டமன்றத்திலேயே சுகாதாரத் துறை அமைச்சர் இதற்கான உறுதிகளை அளித்தும், இன்று வரை ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை என்று செவிலியர்கள் குற்றம் சாட்டினர்.
"ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, வந்த பிறகு ஒரு பேச்சா?" என வினவிய போராட்டக்காரர்கள், மகப்பேறு விடுப்பு போன்ற அடிப்படை உரிமைகளுக்காகக் கூட ஒரு பெண் செவிலியர் வீதிக்கு வந்து போராட வேண்டிய அவல நிலை தமிழகத்தில் நிலவுவதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். அமைச்சரின் வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் காகித அளவிலேயே தங்கிவிட்டதால், வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக அவர்கள் ஆவேசம் அடைந்தனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஓயப்போவதில்லை எனச் சூளுரைத்த செவிலியர்கள், கைதான தங்கள் சக ஊழியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டம் மாநிலம் தழுவிய அளவில் தீவிரமடையும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
in
தமிழகம்