ஐப்பசி பௌர்ணமியையொட்டி பிரம்மாண்ட நிகழ்வு: அன்ன பிரசாதம் பக்தர்களுக்கும், ஜீவராசிகளுக்கும் அர்ப்பணம்!
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு (சிவன்) இன்று ஐப்பசி பௌர்ணமியையொட்டி பிரம்மாண்டமான அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாத பௌர்ணமியான இன்று (நவம்பர் 5). பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பக்தர்களால் வழங்கப்பட்ட ஆயிரம் கிலோ அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகளைக் கொண்டு சிவலிங்கத்திற்குச் சிறப்பு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.
அன்னாபிஷேகம் முடிந்த பிறகு, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த அன்னாபிஷேகக் காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று இரவு அன்னாபிஷேகம் கலைக்கப்படும். அதில் உள்ள அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். எஞ்சியுள்ள பிரசாதம், நீர் நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்காக (நீர்வாழ் உயிரினங்கள்) நீரில் கரைக்கப்படும்.
