பார்வதி, கணவர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு: EVP தரப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உண்மை அம்பலம்!
சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள EVP ஃபிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மீது பெங்களூரைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் பார்வதி அளித்திருந்த பாலியல் புகாரில், திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பார்வதி புகார் அளிப்பதற்கு முன்பே, சந்தோஷ் ரெட்டி அவர் மீது பண மோசடிப் புகார் அளித்ததற்கான ஆதாரங்களை EVP தரப்பு வெளியிட்டதையடுத்து, பார்வதியின் புகார் பொய் வழக்கு என அம்பலமாகியுள்ளது.
பல்வேறு மொழிப் படப்பிடிப்புகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடக்கும் EVP ஃபிலிம் சிட்டிக்குத் தனி அடையாளம் உள்ளது. அதன் உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மீது, பிரபல ஆடை வடிவமைப்பாளரான பார்வதி பெங்களூர் வயாலி காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.
இந்த விவகாரம் பூதாகரமாக மாறிய நிலையில், EVP ஃபிலிம் சிட்டி உரிமையாளர் தரப்பு திடுக்கிடும் ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதில், பார்வதி புகார் அளிப்பதற்கு முன்பே, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டை காவல் நிலையத்தில், சந்தோஷ் ரெட்டி பார்வதி மீது பண மோசடிப் புகார் அளித்திருப்பது தெரியவந்துள்ளது.
குடும்ப நண்பரைப் போலப் பழகிய பார்வதி, லாவகமாகப் பேசி அவரிடம் இருந்து ₹32 லட்சத்திற்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளார். இது போலவே பார்வதி பல்வேறு நபர்களிடமும் மோசடி செய்திருப்பதற்கான ஆதாரங்கள் காவல் நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில், நசரத்பேட்டை போலீஸார் ஆடை வடிவமைப்பாளர் பார்வதி, அவரது கணவர் பார்த்திபன் மற்றும் நண்பர் நித்திஷ் ஆகியோர் மீது குற்றவியல் நம்பிக்கை மீறல் (Criminal Breach of Trust), ஏமாற்றுதல் (Cheating), மிரட்டல் (Intimidation) உள்ளிட்ட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அவர்களைக் காவல்துறையினர் வலை வீசித் தேடி வருகின்றனர்.
இதன் மூலம், பண மோசடி வழக்கில் இருந்து தப்பிக்கவே ஆடை வடிவமைப்பாளர் பார்வதி, சந்தோஷ் ரெட்டி மீது பொய்யான பாலியல் வன்கொடுமைப் புகாரைத் திட்டமிட்டு அளித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
