மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூவரிடம் நடுவர் நீதிமன்ற நீதிபதி நேரடி விசாரணை: குற்றவாளிகள் மீது 6 பிரிவுகளில் வழக்கு!
கோவை, நவம்பர் 5, 2025: கோவையில் முதுகலை மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையினரால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று குற்றவாளிகளிடமும், கோவை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று நடுவர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரகுமான் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரையைச் சேர்ந்த 21 வயதான மாணவி, கோவையில் உள்ள கலைக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருத்தாவன் நகர் பகுதியில் பேசிக் கொண்டிருந்தார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிகளைச் சேர்ந்த சதீஷ் என்கிற கருப்புசாமி, கார்த்திக் என்கிற காளீஸ்வரன் மற்றும் அவர்களது உறவினர் குணா என்கிற தவசி ஆகிய மூன்று பேர் மது போதையில் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்துள்ளனர். கார் கண்ணாடியைக் கல்லாலும், அரிவாள் போன்ற ஆயுதங்களாலும் உடைத்து மிரட்டிய அவர்கள், ஆண் நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுச் குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கியிருந்த அவர்கள், காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்ப முயன்றுள்ளனர். இதில் சந்திரசேகர் என்ற காவலர் படுகாயம் அடைந்தார். தற்காப்புக்காகக் காவல்துறை துப்பாக்கியால் சுட்டதில், மூன்று குற்றவாளிகளின் காலிலும் குண்டு பாய்ந்தது. அவர்கள் உடனடியாகக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் மீது ஏற்கனவே கோவை, திருப்பூர் உட்படப் பல பகுதிகளில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சத்தியமங்கலத்தில் நடந்த திருட்டு வழக்கில் ஜாமினில் வந்து 30 நாட்களே ஆவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குற்றவாளிகள் மூவர் மீதும் கூட்டுப் பாலியல் பலாத்காரம், அடித்துத் துன்புறுத்தல், பொருட்களைச் சேதப்படுத்துதல் உள்பட ஆறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கோவை நடுவர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரகுமான், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குணா, சதீஷ், கார்த்திக் ஆகியோரிடம் நேரில் சென்று விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சட்ட நடைமுறைப்படி இது கட்டாயமாகும்.
