சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்: வாகன ஓட்டிகள் சிரமம்; ஏரிகள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!
திருவண்ணாமலை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இரவு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாகச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வியாபாரிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருவண்ணாமலை மாநகரம், வேங்கிக்கால், அடிஅண்ணாமலை, ஆடையூர், நல்லவன்பாளையம், அத்தியந்தல், தென்மாத்தூர், எடப்பாளையம், ஏந்தல், மலப்பாம்பாடி, நொச்சிமலை உள்ளிட்ட கிராமங்களில் இன்று இரவு சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாகப் பலத்த மழை பெய்தது. முக்கியச் சாலைகள் மற்றும் சின்னக்கடை வீதி ரவுண்டானா பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதி அடைந்தனர்.
வியாபாரிகள் அவதி: திருவண்ணாமலை நான்கு மாட வீதிகளில், குறிப்பாகத் தேரடி வீதியில் இந்திரலிங்கம் அருகே இருக்கக்கூடிய கடைகளில் வெள்ள நீர் முழங்கால் அளவுக்குப் புகுந்தது. திடீரெனப் பெய்த கனமழை காரணமாகக் கடைக்குள் புகுந்த வெள்ள நீரை அகற்ற முடியாமல் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர். கடை ஊழியர்கள் வெள்ள நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். கனமழை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது.
கனமழை காரணமாகச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோதும், குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே பலத்த மழை பெய்யக்கூடும் என்று அறிவித்த நிலையில், இன்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து இந்தப் பலத்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
