பயணத்தின்போது பெண்ணின் காலைத் தொட்ட ராபிடோ ஓட்டுநர்.. வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட பெண்.. போலீஸ் விசாரணை ஆரம்பம்!
பெங்களூருவில் பைக் டாக்ஸியில் பயணித்த இளம்பெண் ஒருவருக்கு, ஓட்டுநர் ஒருவரால் பாலியல் சீண்டல் நேர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பயணத்தின்போது ஓட்டுநர் தனது கால்களைத் தொட முயன்றதாக அந்தப் பெண் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளதால், பெண்களின் பாதுகாப்பு குறித்துக் கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.
சர்ச் தெருவில் இருந்து தான் தங்கியிருக்கும் இடத்திற்குச் செல்ல அந்தப் பெண் ராபிடோ நிறுவனத்தின் பைக் டாக்ஸியைப் புக் செய்துள்ளார். லோகேஷ் என்ற ஓட்டுநர் வந்துள்ளார். அவருடன் பயணம் செய்யும்போதே, அவர் திடீரெனப் பெண்ணின் கால்களைத் தொட முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், என்ன செய்கிறீங்க அண்ணா? இப்படிச் செய்யாதீங்க என்று எச்சரித்துள்ளார். எனினும், அந்த ஓட்டுநர் மீண்டும் முயன்றதாக அந்தப் பெண் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஓட்டுநரின் சீண்டல் தொடர்ந்ததால், வேறு வழியின்றித் தனது செல்போனில் அந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளார். பெங்களூருக்குப் புதிதாக வந்திருந்ததால், நடுவழியில் இறங்கத் தயங்கிய அவர், தங்கும் இடம் வரை பயணம் செய்துள்ளார். அங்கு வந்த பின், அருகிலிருந்த நபர் சந்தேகத்துடன் கேட்டபோது, நடந்த சம்பவத்தை அந்தப் பெண் விளக்கியுள்ளார். அப்போது ஓட்டுநர், தெரியாமல் செய்துவிட்டேன், இனி செய்ய மாட்டேன்” என்று கூறியதாகவும், பின்னர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பதிவில் தெரிவித்துள்ளார். ஆனால், அங்கிருந்து செல்லும் வேளையில், ஓட்டுநர் ஆள்காட்டி விரலை நீட்டி “கொன்று விடுவேன்” என மிரட்டியதாக அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பரவியதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் புகாருக்குப் பதிலளித்துள்ள பெங்களூரு காவல்துறையும், சம்பந்தப்பட்ட ராபிடோ நிறுவனமும் உடனடியாக விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவத்துக்கான ஆதார வீடியோவும், ஓட்டுநரின் விவரங்களும் தற்போது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் எனது தரப்பை புரிந்துகொண்டனர்; வீடியோ ஆதாரம் உண்மையானது என்று உறுதி செய்துள்ளனர் என்று அந்தப் பெண் தனது அடுத்தடுத்த பதிவுகளில் தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் இன்னும் தொடர்வதற்கான சாட்சியாக இந்தச் சம்பவம் கருதப்படுவதாகவும், புகார் செய்யப் பயப்படாமல் முன்வர வேண்டும் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
