தாய் மற்றும் சகோதரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்: பொய் வழக்கு போடுவதாகக் குற்றச்சாட்டு – மருத்துவ சிகிச்சைக்காகச் சென்றதாகக் குடும்பத்தார் தகவல்!
சென்னை திருவல்லிக்கேணி, மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடிச் சகோதரர்களான வினோத் (குள்ள வினோத்) மற்றும் பாலாஜி ஆகியோர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாகவும், அவர்களைச் சென்னைக்கு அழைத்து வரும்போது உடலுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்குப் போலீஸாரே பொறுப்பு என்றும் அவர்களின் தாயார் மற்றும் சகோதரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
வினோத் மற்றும் பாலாஜியின் தாயார் தேன்மொழி, சகோதரி மோகனா ஆகியோர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவைச் சமர்ப்பித்தனர். அதைத் தொடர்ந்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், அண்ணாசதுக்கம் போலீசார் தங்கள் இரு மகன்கள் மீதும் தொடர்ந்துப் பொய் வழக்குகளைப் போட்டு வருவதாகக் குற்றம் சாட்டினர். கடந்த முறை பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் கூட, நீதிமன்றம் அவர்களைச் சிறையில் அடைக்க மறுத்துவிட்டதைச் சுட்டிக்காட்டினர்.
தங்கள் மகன்கள் இருவரும் மருத்துவ சிகிச்சைக்காகக் கொல்கத்தா சென்றிருந்ததாகவும், ஆனால் சென்னை போலீசார் கொல்கத்தா போலீஸார் உதவியுடன் அவர்களைக் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், இரு மகன்களையும் சென்னை போலீஸார் அழைத்து வரும்போது, அவர்களின் கை, கால்களை உடைக்க வாய்ப்புள்ளதாகவும், பொய் வழக்குகள் போடப்படலாம் என்றும் அஞ்சிக் கண்ணீருடன் கூறினர்.
சென்னைக்கு அழைத்து வரும்போது 2 மகன்களுக்கும் ஏதாவது நடந்தால், அது தனிப்படை போலீஸார் தான் பொறுப்பு என்று தாயார் தேன்மொழியும், சகோதரி மோகனாவும் பகிரங்கமாகத் தெரிவித்தனர்.
ரவுடி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு:
இதற்கிடையில், ரவுடி வினோத், தான் கைது செய்யப்படுவதற்கு முன்பாக ஒரு வீடியோவைப் பதிவு செய்து யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் கொல்கத்தா போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை போலீஸார் தங்களை அழைத்து வர இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், "தொடர்ந்து தங்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர். எங்களுக்கு என்ன நடந்தாலும் தனிப்படை போலீசார் தான் காரணம். கை, கால்கள் நல்லா இருக்கிறது. அது உடைக்கப்பட்டால் சென்னை போலீஸ் தான் காரணம்" என்றும் அவர் பேசி உள்ளார்.
ரவுடிகள் வினோத் மற்றும் பாலாஜி எந்த வழக்கிற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த விவரங்களை காவல்துறையினர் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
