அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கொடுத்த அழுத்தமான மனு – பாலின பாகுபாட்டுச் செயல் எனச் சாடல்!
திரைப்பட நடிகை கௌரி கிஷனைப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது உருவ கேலி செய்து அவமதித்த யூடியூபர் கார்த்திக் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இன்று மாநில மகளிர் ஆணையத்தில் (State Women's Commission) அதிரடியாகப் புகார் அளித்துள்ளது. இந்தப் புகார், பொதுத் தளங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்புகள் குறித்துக் கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அனைத்திந்திய மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரமிளா அவர்கள், மாநில மகளிர் ஆணையத்தில் இன்று நேரடியாகப் புகார் மனுவை அளித்தார். அதில், “சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, 'வேற லெவல் சினிமா' எனும் யூடியூப் சேனலைச் சேர்ந்த கார்த்திக், நடிகை கௌரி கிஷனைத் தன்னுடைய கேள்விகளில் உருவ கேலி செய்ததோடு மட்டுமல்லாமல், கௌரி கிஷனை அவமதிக்கும் வகையிலும், மரியாதையற்ற வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தச் செயல் பெண்களின் கௌரவத்தையும், சுயமரியாதையையும் மீறிய கடுமையான பாலின பாகுபாட்டுச் செயல் என்று அந்த மனுவில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக, பத்திரிகையாளர் சந்திப்பு போன்ற பொது மேடையில் ஒரு பெண் கலைஞரை உருவ அடிப்படையில் கேலி செய்வது மனரீதியான அடக்குமுறை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான இழிவான விவாதம் நடந்தபோது மற்ற பத்திரிக்கையாளர்கள் அமைதியாக இருந்ததும் கண்டிக்கத்தக்கது என்று AIDWA அமைப்பு தெரிவித்துள்ளது.
யூடியூபர் கார்த்திக்கின் இச்செயல், பெண்களை ஊடகம் மற்றும் பொதுத் தளங்களில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையையே தடுக்கின்றன என்றும் அந்த மனுவில் ஆணித்தரமாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மீதான அவமதிப்பு எந்த வடிவிலும் அனுமதிக்கக் கூடாது என்றும், கலைஞர்கள், ஊடகங்கள் மற்றும் சமூகத் தளங்களில் மரியாதை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சமூகப் பொறுப்பற்ற விவகாரத்தில் மகளிர் ஆணையம் உடனடித் தலையீடு செய்து, யூடியூபர் கார்த்திக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று AIDWA அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
