'தனியார்மயமாக்கல் கூடாது, பணி நிரந்தரம் வேண்டும்' – மெரினா கடற்கரை உட்பட 5 இடங்களில் போராட்டம் நடத்தத் திட்டம்!
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தூய்மைப் பணியாளர்கள் இன்று 100-வது நாளாகப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ள நிலையில், சென்னை ரிப்பன் மாளிகை முன்பு காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலம் 5 மற்றும் 6-ஐச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், தனியார்மயமாக்கலைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி, கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடர்ந்துப் போராடி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரிப்பன் மாளிகை முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள், நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 13 நள்ளிரவில் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு, இரு மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கட்டங்களாகப் போராட்டங்களை மேற்கொண்ட போதும், அவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பு மெரினா கடற்கரை கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டபோதும், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பழைய முறைப்படித் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தனியார்மயத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டத்தை இன்று 100-வது நாளாக நடத்துவதற்குத் தூய்மைப் பணியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இன்று ரிப்பன் மாளிகை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட சென்னை நகரின் சுமார் ஐந்து இடங்களில் போராட்டத்தை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திலும் போராட்டம் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியானதையடுத்து, அங்கும் போலீஸார் குவிக்கப்பட்டுப் பலத்தப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சென்னையில் இன்று பரபரப்பான சூழல் நிலவுகிறது.
