போக்குவரத்து காவலரின் நடவடிக்கையை வரவேற்ற பொதுமக்கள்; கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
சேலம் மாவட்டம் ஓமலூர் நகரில், காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இந்த விதி தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது.
ஓமலூரில் காலை 8 முதல் 11 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழையத் தடை உள்ளது. இந்தத் தடையை மீறி இன்று மாலை நகரின் முக்கியச் சந்திப்பில் நுழைந்த கனரக வாகனத்தைப் போக்குவரத்து காவலர் ஒருவர் மடக்கி, ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்தச் சமயத்தில், பள்ளி முடிந்து மாணவிகள் சாலையில் சென்றதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு இதே பகுதியில் கனரக வாகனம் மோதி ஒரு மாணவி உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்த நிலையில், மீண்டும் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், போக்குவரத்து காவலரின் உடனடி நடவடிக்கையைப் பொதுமக்கள் வெகுவாக வரவேற்றனர். இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
