தமிழகத்தின் பாரம்பரியமான இடத்தைப் பெற்ற மணப்பாறை முறுக்கு, இப்போது புவிசார் குறியீடு (Geographical Indication – GI) இலட்சினை (Logo) வெளியிடப்பட்டுள்ளது.
மணப்பாறை முறுக்கிற்கு புவிசார் குறியீடு கிடைத்ததைத் தொடர்ந்து, அதற்கான பிரத்யேக இலட்சினை (Logo) வெளியிடும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. சுலோச்சனா-பன்னீர்செல்வம் அறிவுசார் சொத்துரிமை மையம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி இலட்சினையை வெளியிட, மணப்பாறை முறுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் சேகர் பெற்றுக்கொண்டார்.
நன்மை என்ன?
மணப்பாறை முறுக்கு பொட்டலங்களில் இந்த லோகோ இடம்பெறுவதால், இது ஒரு அடையாள முத்திரையாகச் செயல்பட்டு, நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
இதனால், பாரம்பரிய தயாரிப்பாளர்களின் விற்பனை மற்றும் லாபம் அதிகரிக்கும்.
இந்தப் பெயரையோ, முத்திரையையோ தவறாகப் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மணப்பாறை முறுக்கு திருச்சி மாவட்டத்தில் புவிசார் குறியீடு (Geographical Indication) பெற்ற முதல் பொருளாகும். 2014-ல் விண்ணப்பிக்கப்பட்டு 2023-ல் புவிசார் குறியீடு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கறிஞர் சஞ்சய்காந்தி பேசுகையில், "இந்தியாவில் இதுவரை 692 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 69 பொருட்களில் 55 பொருட்களுக்கு நான் பெற்றுக்கொடுத்துள்ளேன். தஞ்சாவூர் சீரக சம்பா, தஞ்சாவூர் கண்ணாடிப் பொருட்கள் உள்ளிட்ட ஐந்து பொருட்களுக்கும் விரைவில் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது" என்றார்.