தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன், தனது தயாரிப்பு நிறுவனமான 'க்ராஸ் ரூட்ஸ் ஃபிலிம் கம்பெனி'யை மூடப்போவதாக அறிவித்துள்ளார்.
வெற்றிமாறன் தொடர்ந்து தயாரித்த படங்கள் பிரச்சனைகளில் சிக்கியதே இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2007-ல் 'பொல்லாதவன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன், அதன் பின்னர் 'ஆடுகளம்', 'விசாரணை', 'வட சென்னை', 'அசுரன்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். இயக்கம் மட்டுமல்லாது, கடந்த 2012-ஆம் ஆண்டு 'க்ராஸ் ரூட்ஸ் ஃபிலிம் கம்பெனி' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, படங்களைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டு வந்தார்.
'படத் தயாரிப்பில் சுதந்திரம் இல்லை'
வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், 'உதயம் என்.ஹெச்.4', 'பொறியாளன்', 'காக்கா முட்டை', 'விசாரணை', 'கொடி' மற்றும் 'அண்ணனுக்கு ஜெய்' உள்ளிட்டப் படங்கள் வெளியாகி உள்ளன. இதில், கடைசியாக அவர் தயாரித்த **'பேட் கேர்ள்'** திரைப்படம் தணிக்கைத் துறையுடன் (சென்சார் போர்டு) பல போராட்டங்களைச் சந்தித்தது.
இந்த அனுபவங்கள்குறித்துப் பேசிய வெற்றிமாறன், "படங்களை இயக்குவதில் இருக்கும் சுதந்திரம், தயாரிப்பில் இல்லை. தயாரிப்பு மிகவும் கடினமான ஒரு பணி" என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே தனது தயாரிப்பு நிறுவனத்தை மூட முடிவு செய்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு, வெற்றிமாறன் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.