டிசம்பர் இறுதிக்குள் பணி நிறைவடையுமா என உயர் நீதிமன்றம் கேள்வி!
மதுரையைச் சேர்ந்த மணி பாரதி என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ள புதுமண்டபம், திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்டது. கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தில், வணிக ரீதியாகக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. தற்போது, அந்தக் கடைகள் மாற்றப்பட்டுள்ளதால், புதுமண்டபத்தைப் பழமை மாறாமல் புதுப்பித்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்குத் திறக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் தரப்பு வழக்கறிஞர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகப் புதுமண்டபம் புதுப்பிக்கும் பணி முடிந்துவிடும். தற்பொழுது பணிகள் நடந்து வருகின்றன, எனவே கால அவகாசம் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக, வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் புதுமண்டபம் புதுப்பிக்கும் பணி முடிந்துவிடுமா? என்பது குறித்து கோவில் இணை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.