இஸ்லாமிய பெண் புறக்கணிக்கப்பட்ட செயல் வெறுப்பை காட்டுகிறது! - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கண்டனம்!
சென்னை: திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வழியாகச் செல்லும் தனியார் பேருந்தில் இஸ்லாமியப் பெண் ஒருவர் ஏற மறுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பேருந்து நிர்வாகத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் தனியார் பேருந்தில், காயல்பட்டினம் செல்வதற்காக ஏற முயன்ற இஸ்லாமியப் பெண்ணை, ஓனர் ஏற்ற வேண்டாம் என்று சொன்னதாகக் கூறி நடத்துனர் வாக்குவாதம் செய்தது கண்டிக்கத்தக்கது. இது இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ''காயல்பட்டினம் பயணிகளைப் புறக்கணிக்கும் தனியார் பேருந்து நிர்வாகம் ஒன்றை உணர வேண்டும். நீங்கள் புறக்கணித்தது போல் காயல்பட்டினம் மக்களும் உங்கள் பேருந்துகளைப் புறக்கணித்தால், உங்களின் பேருந்து நிர்வாகத்தையே இழுத்து மூட வேண்டியது வரும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால், காயல்பட்டினம் ஊருக்குள் தனியார் பேருந்துகள் நுழைய முடியாத சூழல் உருவாகும்'' என்றும் எச்சரித்துள்ளாரெனக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.