விசாரணையை மாற்றிய உத்தரவை எதிர்த்துத் திமுக தொடர்ந்த வழக்கு!
திமுக அறக்கட்டளை தொடர்பான வருமான வரி வழக்கில், விசாரணை முடியும் வரை எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலின்போது, அமைச்சர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்நிலையில், திமுக கட்சி, திமுக அறக்கட்டளை, மற்றும் அமைச்சர் துரைமுருகன் தொடர்பான வருமான வரி வழக்குகளின் விசாரணையை, ஒருங்கிணைந்த விசாரணை நடத்த வேண்டும் என்ற காரணத்தைக் கூறி, வருமான வரித்துறையின் மத்திய சர்க்கிளுக்கு மாற்றி வருமான வரித்துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, திமுக அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணையை மத்திய சர்க்கிளுக்கு மாற்றிப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், "கட்சியின் பொதுச் செயலாளர் வருமான வரி கணக்கு வேறு, திமுகவின் வருமான வரி கணக்கு வேறு. இரண்டையும் வருமான வரித்துறையின் மத்திய சர்க்கிள் விசாரிக்கக் கூடாது" என வாதிட்டார்.
இதனையடுத்து, நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்குமாறு திமுக அறக்கட்டளைக்கு உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை, இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.