காவல் ஆய்வாளரையும் தரக்குறைவாகப் பேசிய காவலர்; உயர் அதிகாரிகள் விசாரணை!
சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் காவலர் ஒருவர் போதையில் சக காவலர்கள் மற்றும் காவல் ஆய்வாளரிடம் தகராறு செய்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமாபுரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் பிரபு, சமீப நாட்களாகப் போதையில் காவல் நிலையத்திற்குப் பணிக்கு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை அவர் போதையில் வந்த நிலையில், அங்கிருந்த காவல் ஆய்வாளர் மற்றும் சக காவலர்கள் அவரைக் கண்டித்துள்ளனர்.
அப்போது, காவலர் பிரபு, போலீசார் அனைவரையும் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. கஞ்சா மற்றும் மது போதையில் அவர் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே இதே போன்று பிரபு போதையில் வந்து காவல் நிலையத்தில் பிரச்சினை செய்து வருகிறாரெனப் புகார் எழுந்துள்ளது.
இன்று நடந்த இந்தச் சம்பவம் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
