"அனைத்து அதிமுக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்" - பூலித்தேவர் விழாவில் ஓபிஎஸ் பேச்சு!
அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளும் ஒன்றிணைய வேண்டும் எனச் சின்னம்மா (சசிகலா) கூறிய கருத்தை வரவேற்பதாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவலில் மாமன்னர் பூலித்தேவரின் 310-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற ஓ.பி.எஸ்., அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து சென்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் எனச் சின்னம்மா கூறிய கருத்தை நான் முழுமையாக வரவேற்கிறேன்.
"பிரிந்து கிடக்கும் சக்தியை ஒன்று சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளேன். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா புகழைப் பாடும் தொண்டனாக அனைத்துத் தொகுதிகளுக்கும் வருவேன்.
விஜய்யுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு, "எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்" என்று பதிலளித்தார்.
தமிழக முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
டிஜிபி நியமனம்:
"டிஜிபி பதவிக்குச் சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் செய்வதுதான் மரபு" என்றும், சமீபத்திய பொறுப்பு டிஜிபி நியமனம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.