போலி தங்க நகைகள் ஏற்றுமதி: 487 கோடி மதிப்புள்ள 1200 கிலோ போலி தங்கம் கடத்தல்; 6 கோடி லஞ்சம்!
சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், தனியார் நகைக்கடை உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்து, 487 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 1200 கிலோ போலி தங்க நகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது சிபிஐ விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த மோசடி தொடர்பாக நான்கு சுங்கத்துறை அதிகாரிகள், மூன்று நகைக்கடை உரிமையாளர்கள் உட்பட பத்து பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
மோசடி பின்னணி:
மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI) நடத்திய விசாரணையில், சென்னை விமான நிலைய சரக்கு தளத்தைச் சேர்ந்த சில சுங்கத்துறை அதிகாரிகள், தனியார் நகைக்கடை நிறுவனங்களுடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மோசடி எப்படி நடந்தது?
* 2020 நவம்பர் முதல் 2022 ஜனவரி வரை, தனியார் நகைக்கடை நிறுவனங்களான சிரோயா ஜுவல்லர்ஸ், ஸ்ரீ கல்யாண் ஜுவல்லர்ஸ், சுனில் ஜுவல்லர்ஸ் மற்றும் பாலாஜி ஜுவல்லர்ஸ் ஆகியவை உண்மையான தங்க நகைகளுக்குப் பதிலாக, பித்தளை மற்றும் செம்பு போன்ற உலோகங்களுக்குத் தங்கப் பூச்சு பூசி ஏற்றுமதி செய்துள்ளன.
இந்த போலி நகைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் "உண்மையான தங்க நகைகள்" எனச் சான்றளித்து ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளனர்.
* இந்த மோசடிக்கு லஞ்சமாக, ஒரு போலி கிராமிற்கு ரூ.50 வீதம் மொத்தம் 6 கோடி ரூபாய் வரை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாக சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சுங்கத்துறை கண்காணிப்பாளர்கள் ஜே.சுரேஷ் குமார், அலோக் ஷுக்லா, பி.துளசி ராம் மற்றும் நகை ஆய்வாளர் என். சாமுவேல் தீபக் அவினாஷ் ஆகியோர் உட்பட மொத்தம் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்திய இந்த மோசடி குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.