சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மின்னஞ்சல்மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் (இமெயில்) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்துத் தகவல் அறிந்ததும், உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டுகளைக் கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பகுதியிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மிரட்டல் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார் என்பது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மிரட்டல் காரணமாக உயர் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.