ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பாதுகாப்புப் பணிக்காகச் சென்னை வந்துகொண்டிருந்த காவல்துறை வேன், கண்டெய்னர் லாரிமீது மோதிய விபத்தில் மூன்று போலீசார் காயமடைந்தனர்.
தர்மபுரியிலிருந்து நக்சல் தடுப்பு சிறப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் யூசுப், சிறப்பு உதவி ஆய்வாளர் சித்தையன் உட்பட ஏழு போலீசார், ஏ.கே. 47 துப்பாக்கிகளுடன் டெம்போ வேனில் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஜே.கே. டயர்ஸ் நிறுவனத்திற்கு அருகில் சென்றபோது, திடீரெனச் சாலையின் இடது புறம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியின் மீது இவர்களது வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வாகனத்தின் முன்பக்கம் சேதமடைந்தது.
இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் வேலுமணி மற்றும் இரண்டு உதவி ஆய்வாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்ததும் லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்ட நிலையில், அவரைச் சோமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.