வார, மாத இதழ்களின் விற்பனை சரிவு; 2025 முதல் பாதியாண்டுக்கான அறிக்கை வெளியீடு!
புதுடில்லி: நாட்டில் நாளிதழ்களின் விற்பனை, நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 2.77 சதவீதம் அதிகரித்துள்ளதாக, பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு (ஏ.பி.சி.) தெரிவித்துள்ளது.
ஏ.பி.சி. வெளியிட்டுள்ள 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான தணிக்கை அறிக்கையின்படி, கடந்த 2024-ஆம் ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 2 கோடியே 89 லட்சத்து 41,876 நாளிதழ்கள் விற்பனையாகின. இது, 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 2 கோடியே 97 லட்சத்து 44,148 பிரதிகளாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், நாளிதழ் விற்பனை 8 லட்சத்து 2,272 பிரதிகள் அதிகம் விற்பனையாகி, 2.77 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
அதேசமயம், வாராந்திர நாளிதழ்களின் விற்பனை கடந்த ஆண்டின் இரண்டாம் பகுதியை விட 2.88 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், வார மற்றும் மாத இதழ்களின் விற்பனை 23.58 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த அறிக்கை, நாளிதழ்களின் வளர்ச்சி நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது.
ஏ.பி.சி. எனப்படும் பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு, நம் நாட்டில் உள்ள நாளிதழ்கள் மற்றும் இதழ்களின் வினியோகம் தொடர்பாகத் தணிக்கை செய்து சான்றளிக்கும் பணியைச் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.