தேர்தல் பத்திரங்கள் மூலம் 70% வருவாய்; அதிக வருமானம் ஈட்டிய கட்சி பிஆர்எஸ்!
நாடு முழுவதும் உள்ள 40 மாநிலக் கட்சிகள், 2023 - 24 நிதியாண்டில் மொத்தம் ரூ.2,532 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளன. இந்த வருவாயில் 70% தேர்தல் பத்திரங்கள் மூலமே கிடைத்துள்ளதாக, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாய் முந்தைய ஆண்டை விட 45.77% அதிகரித்துள்ளது.
அதிக வருமானம் ஈட்டிய முதல் ஐந்து கட்சிகளின் பட்டியல் பின்வருமாறு:
* பிஆர்எஸ் (பாரதிய ராஷ்ட்ரிய சமிதி): ரூ.685.51 கோடி
* திரிணமுல் காங்கிரஸ்: ரூ.646.39 கோடி
* பிஜு ஜனதா தளம்: ரூ.297.81 கோடி
* தெலுங்கு தேசம்: ரூ.285.07 கோடி
* ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்: ரூ.191.04 கோடி
இந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளான திமுக ரூ.180.94 கோடியும், அதிமுக ரூ.46.98 கோடியும் வருமானம் ஈட்டியுள்ளன. இதில், திமுகவின் வருமானம் முந்தைய ஆண்டை விட ரூ.33 கோடியும், அதிமுகவின் வருமானம் ரூ.26 கோடியும் அதிகரித்துள்ளது.
மொத்த வருவாயில் ரூ.2,117.85 கோடி நன்கொடைகள் மூலம் கிடைத்துள்ளன. இதில், பிஆர்எஸ், திரிணமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட 10 கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் ரூ.1,796.02 கோடி வருவாய் பெற்றுள்ளன.
மேலும், ஆய்வு செய்யப்பட்ட 40 கட்சிகளில், 27 கட்சிகள் தங்களது வருமானத்தை முழுமையாகச் செலவு செய்யவில்லை. ஆனால், திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் தங்களின் வருமானத்தை விட அதிக செலவு செய்துள்ளன.