ஓட்டல் தீவைத்து எரிக்கப்பட்டதால் தப்பி ஓட்டம்; வன்முறையால் சுற்றுலாப் பயணிகள் பரிதவிப்பு; மத்திய அரசு மீட்புப்பணியில் தீவிரம்!
நேபாளத்தில் நிலவும் கடுமையான அரசியல் கொந்தளிப்பு மற்றும் வன்முறையால் அங்குச் சிக்கிக் கொண்ட இந்தியர்கள், தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். வன்முறை வெறியாட்டத்தால் தனது ஓட்டல் எரிக்கப்பட்டதால் உயிர்தப்பி ஓடி வந்த இந்தியப் பெண் ஒருவர் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசுத் தடை விதித்ததைக் கண்டித்து இளைஞர்கள் நடத்திய போராட்டங்கள் வன்முறையாக மாறின. தலைநகர் காத்மாண்டு, பொகாரா, மற்றும் பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. முன்னாள் பிரதமரின் மனைவி உட்பட பலர் வன்முறைக்குப் பலியாகினர். இந்நிலையில், வாலிபால் லீக் நடத்துவதற்காகப் பொகாரா சென்றிருந்த உபாசனா கில் என்ற இந்தியப் பெண் ஒருவர், தனது உயிரைக் காக்கக் கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தான் தங்கியிருந்த ஓட்டலுக்குத் தீவைக்கப்பட்டதாகவும், போராட்டக்காரர்கள் தன்னைத் துரத்தியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் அவர் கூறியுள்ளார். “இங்கு நிலைமை மிக மிக மோசமாக உள்ளது. எல்லா இடங்களிலும் தீ வைக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளைக்கூட அவர்கள் விட்டு வைப்பதில்லை. தயவு செய்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று அவர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல, கேரளாவைச் சேர்ந்த 40 சுற்றுலாப் பயணிகளும், கர்நாடகாவைச் சேர்ந்த 30 பேரும், ஆந்திராவைச் சேர்ந்த 187 தெலுங்கு பேசும் மக்களும் நேபாளத்தில் சிக்கி உள்ளதாக அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
இவர்களை மீட்க அந்தந்த மாநில அரசுகள் மீட்புப் பணிகளைத் தொடங்கி உள்ளன. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர அமைச்சர் நர லோகேஷ் ஆகியோர் மீட்புப்பணிகளைத் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகின்றனர். நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவாவுடன் ஒருங்கிணைந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.