திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் வாணாதிராயர் கல்வெட்டு கண்டறியப்பட்டது!
15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு; வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி!
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள கீழையூர் வீரட்டேஸ்வரர் கோயிலில், இதுவரை கண்டறியப்படாத 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வாணாதிராயர் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, அப்பகுதியின் வரலாற்றில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் தலைமையிலான குழுவினர், இந்தக் கோயிலில் மேற்கொண்ட ஆய்வின்போது இந்தக் கண்டுபிடிப்பை உறுதி செய்துள்ளனர். ஏற்கனவே, இந்த வீரட்டேஸ்வரர் கோயிலில் 105 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், முதல் முறையாக வாணாதிராயர் காலத்து கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது, வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புகுறித்து சிங்கார உதியன் பேசுகையில், இந்தக் கல்வெட்டு வாணாதிராயரின் ஆட்சி காலத்தையும், அன்றைய சமூக, பொருளாதார நிலைமைகளையும் பற்றிய அரிய தகவல்களை வழங்கக்கூடும். இது திருக்கோவிலூர் வரலாற்றை மேலும் செழுமைப்படுத்தும்" என்று தெரிவித்தார்.