விஜய்யால் வெற்றியின் பக்கம் வர முடியாது - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
"பவுன்சர் கலாச்சாரமே தவறு; கலாட்டா மட்டுமே செய்ய முடியும்" - விஜய்யை விமர்சித்த தமிழிசை!
நடிகர் விஜய் தொடங்கிய அரசியல் கட்சி, தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும், அவர் கலாட்டா சலசலப்பு மட்டுமே செய்ய முடியும் என்றும் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் முவரசம்பட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
விஜய்யின் அரசியல் குறித்து தமிழிசை:
"விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தமிழகத்தில் அரசியல் போட்டி என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், 'இந்தியா' கூட்டணிக்கும் இடையேதான். அடுத்த இடத்திற்காக சீமானும், விஜய்யும் போட்டி போட்டுக்கொள்ளலாம்" என்று தமிழிசை கூறினார்.
விஜய் புதிய சிந்தனைகளுடன் வருவார் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவர் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் போன்றவர்களின் சிந்தனைகளைச் சேர்த்துப் பேசுவதாகவும் தமிழிசை குறிப்பிட்டார்.
பவுன்சர் விவகாரம்:
"பவுன்சர் தூக்கிப் போட்டது யார் என்று விவாதம் நடக்கிறது. பவுன்சர் கலாச்சாரமே தவறு. ஒருவரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியாதவர் எப்படி ஆட்சி நடத்த முடியும்? கலாட்டா சலசலப்பு மட்டுமே செய்ய முடியும்; விஜய்யால் வெற்றியின் பக்கம் வர முடியாது" என்று தமிழிசை கடுமையாக விமர்சித்தார்.
விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு மற்ற மாநில முதல்வர்கள் வாழ்த்து சொல்கின்றனர். ஆனால், தமிழக முதல்வர் வாழ்த்து சொல்லாதது தவறு.
மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது, முதலமைச்சர் பீகாருக்குச் சென்றுள்ளார். பீகார் மக்களை இங்கு குறைசொல்லிவிட்டு, அங்கு அவர்களை உயர்த்திப் பேசி இருக்கிறார்.
பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு எல்லா நலத்திட்டங்களையும் செய்து வருகிறார். இனி 'மோடி எதுவும் செய்யவில்லை' என்ற விமர்சனம் எடுபடாது.
"தீர்வு காணப்பட்ட மனுக்களை ஆற்றில் வீச முடியுமா? அப்படியானால் தீர்வு காணப்படாத மனுக்கள் நிறைய உள்ளதா?" என்று முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தார்.