ராணிப்பேட்டையில் பெரும் சுகாதார அவலம்! - நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று அபாயம்!
பிரவுன் ஹவுஸ் கட்டிடத்தின் அருகே கழிவுநீருடன் கலந்து ஓடும் குடிநீர்; பாசி பிடித்த குடிநீர்த் தொட்டி; சமூக ஆர்வலர்கள் உடனடி நடவடிக்கை கோரிக்கை!
ராணிப்பேட்டை: நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட துப்புரவு பணியாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள பிரவுன் ஹவுஸ் கட்டிடத்தின் அருகில் பெரும் சுகாதார அவலம் ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாகக் குழாய் உடைப்பு ஏற்பட்டு, சுத்தமான குடிநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் வழிந்தோடி, அப்பகுதியில் வாழும் மக்களின் உயிருக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
2023-ஆம் ஆண்டில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறையின் கதவுகள் துருப்பிடித்து முற்றிலும் சேதமடைந்துள்ளன. உள்ளே உள்ள குழாய்கள் உடைந்து பயனற்ற நிலையில் உள்ளன. மின்விளக்குகள் இருந்தும், அவை எரியாததால் அந்த இடம் இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. மேலும், அருகில் உள்ள குடிநீர் தேக்கத் தொட்டியும் விரிசல் ஏற்பட்டு, பாசி படிந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
மழைக்காலங்களில் நிலைமை மேலும் மோசமடைந்து கொசுக்களின் உற்பத்தியும், நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இப்பகுதி மக்கள் தினமும் முறையாகச் சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் பணியாளர்களை அனுப்புவதில்லை எனவும், நகராட்சி நிர்வாகத்தின் இந்த அலட்சியம் பொதுமக்களின் உயிரை அபாயத்தில் தள்ளுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சுகாதாரச் சீர்கேட்டை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாவட்ட சிறப்புச் செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்
in
தமிழகம்