முகேஷ் அம்பானியின் புதிய நிறுவனம்: 'ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸ்' - ஏஐ, ஹியூமனாய்டு ரோபோவில் புதிய சகாப்தம்!
ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸின் நான்கு முக்கிய நோக்கங்கள்:
டேட்டா சென்டர் உருவாக்கம்: இந்தியாவில் ஏஐ ஆராய்ச்சிக்காக, சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு பிரம்மாண்டமான டேட்டா சென்டரை உருவாக்குவது.
கூட்டுப்பணி: உலகத் தரம் வாய்ந்த டெக் நிறுவனங்கள் மற்றும் ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவது.
மக்களுக்கான ஏஐ: பொதுமக்களுக்கும், சிறிய நிறுவனங்களுக்கும் எளிமையான மற்றும் நம்பகமான ஏஐ சேவைகளை வழங்குவது.
கண்டுபிடிப்புகளுக்கான மையம்: உலகின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள், மற்றும் டிசைனர்களை ஒரே இடத்தில் இணைத்து, அவர்களின் யோசனைகளை இந்தியாவிற்கும் உலகிற்கும் பயன்படும் தீர்வுகளாக மாற்றுவது.
கூகுள் மற்றும் மெட்டாவுடன் கூட்டணி
ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனைத்து வணிகங்களையும் ஏஐ மூலம் மேம்படுத்த, கூகுளுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அம்பானி தெரிவித்தார். இதற்காக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில், கூகுள் கிளவுட் மூலம் உலகத் தரத்திலான ஏஐ வசதிகளைக் கொண்ட ஒரு கிளவுட் பகுதி உருவாக்கப்படும்.
அதேபோல், ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக ஒரு ஓபன் ஏஐ கருவியை உருவாக்க மெட்டா நிறுவனத்துடன் இணைந்து புதிய நிறுவனத்தை தொடங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவை ஹியூமனாய்டு ரோபோக்களின் மையமாக மாற்ற முதலீடு
ஏஐ துறையில் அடுத்த கட்ட வளர்ச்சியான ஹியூமனாய்டு ரோபோட்டிக்ஸ் குறித்துப் பேசிய முகேஷ் அம்பானி, இதில் ஆச்சரியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். எதிர்காலத்தில், உற்பத்தி, கிடங்கு மேலாண்மை, மற்றும் மருத்துவத் துறைகளில் இந்த ரோபோக்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றார்.
இதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் ஹியூமனாய்டு ரோபோக்களின் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு ரிலையன்ஸ் முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் உற்பத்தி மேம்படுவதுடன், வேளாண்மை வளர்ச்சி அடைந்து, இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்று அவர் தெரிவித்தார்.