2026-ல் விஜய் தான் தமிழக முதல்வர்.. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அதிரடி!
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், 2026-ஆம் ஆண்டு தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் கட்டாயம் முதலமைச்சர் ஆவார் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அத்துடன், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும் என அவர் "நம்பிக்கையுடன்" பேசியுள்ளார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைமை சார்பில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடுகுறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் ஆனந்த், "தமிழக வெற்றிக் கழகம் காசு பணத்தால் சேர்ந்த கூட்டம் கிடையாது. உணர்வுடன் சேர்ந்த உண்மையான சகோதரர்களின் கட்சி. கட்சியின் உயிர் மூச்சு தலைவர் விஜய் தான் என்று தெரிவித்தார்.
மேலும், "வரும் 2026 தேர்தலில் விஜய் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார். அவர் மகளிருக்கு முழுமையான பாதுகாப்பை அளிப்பார். திண்டுக்கல்லில் உள்ள ஏழு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும்" எனக் கூறினார். 'விக்கிரவாண்டி தவெக வெற்றி மாநாடு' குறித்துப் பேசிய அவர், வாகனங்கள், இன்சூரன்ஸ் என அனைத்துப் பதிவுகளுடன் மாநாடு நடத்தும் ஒரே கட்சி தவெக தான் என்று குறிப்பிட்டார். "விஜய் வயது முதிர்வின் காரணமாக அரசியலுக்கு வரவில்லை; துறையின் உச்சத்தில் இருந்துதான் வருகிறார். கடந்த 32 வருடங்களாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் நமது இயக்கம் தான்" என்றும் ஆனந்த் ஆவேசமாகப் பேசினார்.