தொடரும் பாலியல் குற்றங்கள்.. ஆசிரியரின் கொடுஞ்செயல்: கோவையில் 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!
கோவையில் பள்ளி ஆசிரியர் ஒருவர், தான் பாடம் நடத்தும் வகுப்பிலேயே 6 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம், மூதாட்டிகள் முதல் சிறுவர், சிறுமிகள்வரை தமிழகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்கள்குறித்துப் பொதுமக்களிடையே கடுமையான அச்சத்தையும், அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. இந்தச் சம்பவம்குறித்துப் புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட ஆசிரியரைக் காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
கோவை அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். தினமும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்று வந்த அந்தச் சிறுவன், கடந்த சில நாட்களாகச் சோகமாகக் காணப்பட்டான். இதைக் கவனித்த பெற்றோர், அன்பாக விசாரித்தபோது, அவர்கள் கேட்ட பதில் அவர்களை அதிர்ச்சியின் உச்சிக்கே தள்ளியது. அதாவது, அதே பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் 36 வயது நபர், அந்தச் சிறுவனுக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர், உடனடியாகப் பள்ளிக்குச் சென்று ஆசிரியரை முற்றுகையிட்டு கேள்வி கேட்டனர். அவர் முரணான பதில்களை அளித்ததால், உடனே காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறையினர், உடனடியாக வழக்குப் பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.