நெல்லையை தொடர்ந்து சென்னையிலும் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை.. பின்னணி என்ன..?

நெல்லையை தொடர்ந்து சென்னையிலும் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை.. பின்னணி என்ன..?

சென்னை:

நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை மடிப்பாக்கத்திலும் ஒரு திமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் தேர்தல் முடிவுகள் 22 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நகர்ப்புற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நெல்லை, சென்னையில் இரு திமுக பிரமுகர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னுதாஸ்

பாளையங்கோட்டை தெற்கு பஜாரைச் சேர்ந்த பொன்னுதாஸ், திமுகவில் 24-வது வார்டு வட்டச் செயலாளராக இருந்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட 35-வது வார்டில் தனது தாயார் பேச்சியம்மாளை நிறுத்த பொன்னுதாஸ் விருப்ப மனு அளித்திருந்தார்.

டாஸ்மாக் பார்

பொன்னுதாஸுக்கு அந்தப் பகுதியில் பெரும் ஆதரவு இருந்ததால், அவரது தாய்க்கு சீட் கிடைப்பதும் உறுதி எனக் கூறப்பட்டது. இதுபோக, சமீபத்தில் டாஸ்மாக் பாரையும் அவர் ஏலத்தில் எடுத்திருக்கிறார். இந்த சூழலில், கடந்த இரு தினங்களுக்கு முன் இரவு தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அவரை இரு சக்கர வாகனத்தில் வந்த, அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

கொலையாளிகள்

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆறு தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த திமுக பிரமுகர் அருண் பிரவீன் தனது தாயை நிறுத்த திட்டமிட்டிருந்த அதே வார்டில் பொன்னுதாஸும் தனது தாயை நிறுத்த முயற்சித்ததால் இந்த படுகொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அருண் பிரவீனை போலீஸார் தேடி வருகிறார்கள்.

படுகொலை

இந்த கொலை நிகழ்ந்து ஒரே வாரத்தில் மற்றொரு படுகொலை சென்னையில் நிகழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் செல்வம். இவர் அந்த பகுதியின் திமுக வட்டச் செயலாளராக உள்ளார். நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெருங்குடி மண்டலத்தில் உள்ள 188 ஆவது வட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

மடிப்பாக்கத்தில் கொலை

மடிப்பாக்கம் ராம் நகரில் உள்ள இவரது வீட்டிற்கு இரவு 9 மணிக்கு சிலர் மாலையுடன் வந்தனர். தன்னை வாழ்த்த வந்ததாக கருதிய செல்வம் வெளியே வந்த போது மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை கொண்டு செல்வத்தை சரமாரியாக வெட்டினர். இதில் காயமடைந்த செல்வத்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

செல்வம் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார் என்பதால் இந்த கொலை அரசியல் போட்டியால் நிகழ்ந்ததா இல்லை தொழில் போட்டியால் நிகழ்ந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு அடுத்தடுத்து திமுகவினர் கொலை செய்யப்பட்டுள்ளதால் அவர்களது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks