குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா செயல்பட்டு வருகிறது. பல்லுயிர் சரணாலயமாக திகழும் இங்கு காட்டில் பல வகையிலான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வந்தாராவிற்கு கொண்டு செல்லப்பட்ட மாயா:

கேரளாவில் எலும்பு முறிவு உள்ளிட்ட பல வகையான உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த மாயா என்ற குட்டியானை, உயர்தர சிகிச்சைக்காக விமானம் மூலமாக வந்தாராவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வந்தாரா அமைப்பின் நிறுவனர் ஆனந்த் அம்பானி மேற்கொண்ட முயற்சியை அடுத்து, கேரள தலைமை வனவிலங்கு காப்பாளர் டாக்டர் பி புகழேந்தி இந்த சிகிச்சைக்காக குட்டியானையை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் இந்த யானை குஜராத்தில் உள்ள வந்தாராவிற்கு கொண்டு வரப்பட்டது.

குட்டியானை:

மாயா என்ற இந்த குட்டியானை கடந்தாண்டு கேரளாவின் மலையாற்றூர் வனப்பகுதிக்கு உட்பட்ட கபிரிக்காடு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. பிறந்த குட்டியாக இருந்த இந்த மாயா தாயில்லாத நிலையில் வனத்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது. இந்த குட்டியானை கண்டெடுக்கப்பட்டபோது போதுமான நீர்ச்சத்து இல்லாமலும், தாய்ப்பால் அருந்த முடியாத நிலையிலும் இருந்துள்ளது. இதையடுத்து, கால்நடை மருத்துவர் பினாய் சி பாபு மற்றும் வனத்துறையினர் மாயாவை பராமரித்து சிகிச்சை அளித்தனர்.

இரவு பகலாக சிகிச்சை அளித்து ஓரளவு தேறி வந்த மாயா, கடந்த ஜுன் மாதம் திடீரென வழுக்கி விழுந்தததில் அதன் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பின்னர், கடந்த அக்டோபர் மாதம் மாயா யானைக்குட்டியின் முன்னங்கால்கள் இரண்டிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அதன் எலும்புகள் மோசமாகிக் கொண்டே சென்றது.

நிற்க முடியாத சோகம்:

கால்களிலும் ஏற்பட்ட எலும்பு முறிவால் எழுந்து நிற்க இயலாத நிலைக்குச் சென்ற மாயா படுத்தே இருந்ததால் ஏற்படும் புண்களும் அதற்கு உண்டாகியது. மேலும், மார்பு பகுதியில் தொற்றும் ஏற்பட்டது. 18 மாதமே ஆன இந்த யானைக்குட்டியின் உடல்நிலை மோசமாகியதைத் தொடர்ந்து, யானைகள் குறித்த மருத்துவ நிபுணரும், வந்தாரா அமைப்பின் கால்நடை ஆலோசகருமான பத்மஸ்ரீ டாக்டர் குஷால் கோன்வார் சர்மா மாயாவை ஆய்வு செய்தார்.

மாயாவின் எலும்புகள் பலவீனமாவதற்கு பாராதைராய்டு சுரப்பி தொடர்பான கோளாறு இருக்கலாம் என்று கண்டறிந்தார். மேலும், சிறப்பு சிகிச்சை அளித்தால் மாயாவின் உடல்நிலை தேறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதினார். வந்தாரா யானை பராமரிப்பு மையத்தின் முதன்மை கால்நடை மருத்துவர் யதுராஜ் காட்பேக்கரும் இதை உறுதி செய்தார். நீண்ட ஆலோசனைக்கு பிறகு மாயாவை வந்தாரா மையத்திற்கு அழைத்துச் சென்று மேம்பட்ட பரிசோதனைகள் மற்றும் உயர்தர சிகிச்சைகள் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

வான்வழி பயணம்:

இதையடுத்து, பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட வான்வழிப் பயணம் மூலமாக வந்தாராவிற்கு மாயா கொண்டு செல்லப்பட்டது. இந்த பயணத்தில் வந்தாராவின் 3 யானை நல மருத்துவர்கள், துணை மருத்துவ பணியாளர்கள், பராமரிப்பாளர்கள் உடனிருந்தனர்.

மேலும், கேரளாவில் குட்டி யானை மாயாவை கண்காணித்து வந்த மருத்துவர் பினாய் சி பாபு, நிகில் பாபு ஆகியோரும் இந்த பயணத்தில் உடனிருந்தனர். வந்தாராவில் மாயாவிற்கு 24 மணி நேர கண்காணிப்பு, மேம்பட்ட நோயறிதல் வசதிகள், உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது. மாயா நடமாடுவதற்கு ஏற்ப ஹைட்ராலிக் தூக்கும் வசதி, நீர்சிகிச்சை ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.

பிரார்த்தனை:

மாயாவைப் பராமரிப்பதற்கான பொறுப்பு தொடர்ந்து கேரள வனத்துறையிடமே இருக்கும். சிகிச்சை முழுமையடைந்த பிறகு மீண்டும் மாயா அபயாரண்யம் திரும்பவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மாயாவின் சிகிச்சைக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு வந்தாரா சிஇஓ ஷிவான் கரணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் பேசியதாவது, மாயா தனது வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் மாயா தனது வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் உயிர் பிழைக்கப் போராடியிருக்கிறது. இப்போது அதற்காகப் போராட வேண்டிய முறை நம்முடையது. எங்கள் குழுவினர் ஒரு நொடி கூட மாயாவை விட்டு விலக மாட்டார்கள். இந்தச் சிறிய உயிரினத்திற்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு உயிரும் முக்கியமானது; மாயாவின் உயிரும் நம் அனைவருக்கும் மிக முக்கியமானது என்று தெரிவித்தார்.

Source: Read Full Article