நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பது உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல். அடுத்தாண்டு ஜனவரி மாதம் உபி-க்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமாஜ்வாதி - காங்கிரஸ்:

உத்தரபிரதேசத்தில் பாஜக வலுவாக உள்ள நிலையில், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை தனித்துப் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனாலும், மொத்தமாக போட்டியிட்ட 399 தொகுதிகளிலும் சேர்த்து 20 லட்சம் வாக்குகளைப் பெற்றனர்.

இதனால், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வரும் தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று சமாஜ்வாதி முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியோ தங்களுக்கு 3 இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவிற்கு துளியளவும் உடன்பாடில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்:

இந்த நிலையில், டெல்லியில் நடந்த சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் அகிலேஷ் யாதவ் ராகுல் காந்தியையும், பிரியங்கா காந்தியையும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசித்துப் பேசியுள்ளார். அப்போது, தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள நபருக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை உறுதியாக தெரிவித்த அகிலேஷ் யாதவ் தாங்கள் வெற்றி பெற்ற இடங்களை விட்டுக்கொடுக்க இயலாது என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவுடனான சந்திப்பிற்கு பிறகு டெல்லியில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராகுல் காந்தி அகிலேஷ் வலியுறுத்தியதற்கு ஏற்பவே தனது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலையும் சமாஜ்வாதியிடம் அளித்துள்ளது.

தயங்கும் சமாஜ்வாதி:

தற்போது முதற்கட்டமாக 23 இடங்கள் வரை காங்கிரசுக்கு ஒதுக்க சமாஜ்வாதி முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமாஜ்வாதி காங்கிரசுக்கு அதிகளவிலான இடங்களை அளிக்க விருப்பமில்லை என்றே கூறப்படுகிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் 28 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று திமுக தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததுடன், தவெக-வுடன் கூட்டணி வைத்து ஆட்சிப் பொறுப்பிலும் பங்கெடுத்தனர்.

அதுபோல, உத்தரபிரதேசத்திலும் தங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்திவிடுவார்களோ? என்ற அச்சமும் சமாஜ்வாதிக்கு இருப்பதால் அதிக தொகுதிகளை ஒதுக்க அகிலேஷ்யாதவ் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், காங்கிரஸ் கேட்டது போல 3 இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க முடியாது என்பதில் சமாஜ்வாதி திட்டவட்டமாக உள்ளது.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றினால் மட்டுமே அந்த மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளை வெல்ல முடியும் என்று ஒவ்வொரு கட்சியினரும் போட்டா போட்டியிட்டு வருகின்றனர். அந்த 80 தொகுதிகளே நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் முக்கியமான அம்சமாக உள்ளது.

Source: Read Full Article