TN Govt Law-Order: தீபாவளி பண்டிகையின் போது அரங்கேறிய அடுத்தடுத்த கொலை சம்பவங்களை தொடர்ந்து, மத்திய அரசு சட்ட-ஒழுங்கு தொடர்பான அறிக்கையை கோரியுள்ளதாம்.

ரிப்போர்ட் கேட்ட உள்துறை அமைச்சகம்:

தமிழ்நாட்டில் நிலவும் சட்ட-ஒழுங்கு நிலை தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும் படி, மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளதாம். அடுத்தடுத்து நிகழும் கொலை சம்பவங்கள் மற்றும் தவெக தலைமையிலான அரசின் மீதான எதிர்க்கட்சிகளின் தீவிரமான விமர்சனங்களுக்கு மத்தியில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக நடந்த குற்றச்சம்பவங்கள் மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட மாநில அரசாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள், குறித்த ஆளுநரின் மதிப்பீட்டை மத்திய அரசு கேட்டுள்ளதாம்.

சட்ட-ஒழுங்கு பிரச்னை: கவனிக்கும் மத்திய அரசு

தமிழ்நாட்டில் சட்ட-ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக களமாடி வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தான், நாட்டின் உள்துறை அமைச்சகம் விரிவாக அறிக்கை கேட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசில் பெரிய தலையீடுகளை முன்னெடுக்காவிட்டாலும், இங்கு நடக்கும் நிகழ்வுகளை மத்திய பாஜக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்பதையே உணர முடிகிறது என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் 8ம் தேதி தீபாவளி அன்றும், அதற்கடுத்த நாள் அதிகாலையிலும் மாநிலம் முழுவதும் அடுத்தடுத்த நடந்த படுகொலைகள் தான் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: TVK Vijay: வார்னிங் மட்டுமா? ஆக்‌ஷன் வருமா? பனையூரில் இன்று தவெக MLA-க்கள் கூட்டம் - CM விஜய் ப்ளான்?

விஜயை குறிவைக்கும் எதிர்க்கட்சிகள்..!

தேனியில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டு இருந்த இளைஞர்களை தட்டிக்கேட்ட விவகாரத்தில், சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரே அடித்துக் கொல்லப்பட்டது பெரும் பேசுபொருளானது. சட்ட-ஒழுங்கு மற்றும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக உள்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜயை குறிவைக்க, எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதங்களாக மாறின. திமுக, அதிமுக மற்றும் பாஜக என அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு வன்முறைக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதிலும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அரசு தோல்வியடைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளன.

முன்னதாக தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடியபோது, 6 மாத கால தவெக ஆட்சியை முதல்முறையாக தேசிய பாஜக நேரடியாக விமர்சித்து இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது சட்ட-ஒழுங்கு தொடர்பான அறிக்கையை மத்திய அரசு கேட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

முதலமைச்சர் விஜய் ஆலோசனை:

எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ”தீபாவளி தினத்தன்று குற்றச்சம்பவங்கள் புதியதல்ல. அதேநேரம் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவும் காவல்துறை வேகமாகவும் ,முழு சுதந்திரத்துடனும் செயல்பட்டு வருவதாக” அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்தார். இதனிடையே, சட்ட-ஒங்கு தொடர்பாக முதலமைச்சர் விஜய் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். அதில் தலைமை செயலாளர், காவல்துறை டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. நேற்று மாலை வரை 467 ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில், 6 ஆயிரத்திற்கும் அதிகமான ரவுடிகளுக்கு காவல்துறை சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாம்.

Source: Read Full Article