வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து வங்கக்கடலில் அர்னாப் மற்றும் முரசு ஆகிய இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவானது. இந்த இரண்டு புயல்களும் ஆந்திரா நோக்கி சென்று பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. இந்நிலையில் மத்திய அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி நிலவியது. இதனால் நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நாளை காலை அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும்.

உருவாகிறது புயல்

இது மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 16ம் தேதி சக்திவாய்ந்த புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு அக்வான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக்வான் என்றால் அரக்கன் அல்லது அசுரன் என்று பொருள் ஆகும். இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை

அதேபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Government Employees: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! முழு விவரம் இதோ!

மேலும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதிகள்

இன்று தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், இதர தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதையும் படிங்க: Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவம்பர் 14 மிஸ் பண்ணிடாதீங்க!

அதேபோல் நாளை தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள் இதர தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article