தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுவது கந்த சஷ்டி திருவிழா. கடந்த ஒரு வார காலமாக கொண்டாடப்பட்டு வந்த கந்த சஷ்டி திருவிழாவின் முக்கியமான நாளான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது.

இன்று சூரசம்ஹாரம்:

திருச்செந்தூர் கடற்கரையில் இன்று மாலை முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்கிறார். இந்த சூரசம்ஹாரத்தை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சூரசம்ஹாரத்தின்போது முருகப்பெருமான் சூரபத்மனின் மகன்களாகிய பானுகோபன், அக்னி முகாசுரன் ஆகியோரையும், சூரபத்மனின் தம்பிகளான பானுகோபனையும் வதம் செய்து இறுதியாக சூரபத்மனை வதம் செய்வார். இந்த சூரசம்ஹாரத்தை காண்பதற்காக நேற்று இரவு முதல் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடு:

முருகப்பெருமானுக்கும் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடத்தப்பட்டு தீபாராதனை வழிபாடும் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும், தண்ணீர், உணவு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கடற்கரையிலும், கோயில் வளாகத்திலும் சுமார் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு ஏதுவாக திருச்செந்தூர் நோக்கி சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெற இருப்பதால் இன்று பக்தர்களுக்கு கடலில் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருப்பதால் அசம்பாவிதத்தை தவிர்ப்பதை முன்னிட்டு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

விண்ணைப் பிளக்கும் அரோகரா கோஷம்:

சூரசம்ஹாரத்திற்காக சிக்கலில் உள்ள சிங்காரவேலர் கோயிலில் இருந்து வேல் கொண்டு வரப்பட்டது. இந்த வேல் கொண்டே முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்வார். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ள நிலையில், திருச்செந்தூர் முழுவதும் அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்து வருகிறது. பக்தர்கள் பலரும் முருகர் வேடம் தரித்து தங்களது பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் மட்டுமின்றி மற்ற அறுபடை வீடுகளிலும் சூரசம்ஹாரம் இன்று நடக்க உள்ளது. அறுபடை வீடுகள் மட்டுமின்றி இதர கோயில்களிலும் சூரசம்ஹாரம் மாலை நடைபெற உள்ளதை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் காலை முதல் அலைமோதி வருகிறது.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் சூரசம்ஹாரம் என்பதால் சிறப்பாக நடத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் ரமேஷ் நேற்று முதல் திருச்செந்தூரில் நேரில் களத்தில் இருந்து ஆய்வு செய்து பணிகளையும் மேற்பார்வை செய்து வருகிறார்.

Source: Read Full Article