ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான எம்.எஸ்.தோனி ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வுபெற்றுள்ள தோனி சென்னை அணியின் ஆலோசகராக செயல்படுவார் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

'தல' என அன்புடன் அழைக்கப்படும் தோனி

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம், தமிழ்நாட்டை கடந்தும் உள்ளதை நாம் அறிவோம். 'தல' எனவும், கேப்டன் கூல் எனவும் அழைக்கப்படும் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு, இந்திய அளவில் ரசிகர்கள் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. சென்னை அணி என்றால் தோனி, தோனி என்றால் சென்னை எனும் அளவிற்கு தமிழக ஐபிஎல் ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொண்டவர் தோனி.

தோனி இல்லாத சென்னை அணி

சில நாட்களுக்கு முன் பெங்களூருவில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற தோனியிடம் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பீர்களா என கேட்கப்பட்டபோது, தான் முழு உடல் தகுதியுடன் இருக்கிறேனா என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பொறுத்தே ஐபிஎல் பங்கேற்பு குறித்த முடிவை எடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். தோனியின் இந்தப்பேச்சு அவரது ரசிகர்கள அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி விலகியுள்ளார்.2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் தோனி விளையாடி வருகிறார்.இவரது தலைமையின் கீழ் 5 ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணி வென்றுள்ள நிலையில்,கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.

சென்னை அணியின் ஆலோசகராக புதிய அவதாரம்

ஐபிஎல் போட்டிகளில் தோனி பங்கேற்றால் அதை அவரது ரசிகர்களுக்கு திருவிழாபோல் கொண்டாடுவார்கள். கடந்த சீசனைப்போல் எதிர்பாராத விதமாக அவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால் கூட, குறைந்தபட்சம் அவர் சென்னை அணியில் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது. இந்நிலையில் தோனி இல்லாத சென்னை அணியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்கின்றனர் தோனியின் ரசிகர்கள் இல்லை இல்லை பக்தர்கள். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள தோனி, சென்னை அணியின் ஆலோசகராக செயல்படுவார் என சி.எஸ்.கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Source: Read Full Article