தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 9,42,941 பேர் அரசு ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதாவது வீட்டுக் கடன், மருத்துவ காப்பீட்டு திட்டம், ஓய்வூதியம், பண்டிகை முன்பணம், விபத்து காப்பீடு, திருமண உதவி போன்ற சலுகைகள் மனிதவள மேலாண்மைத் துறை வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பல்வேறு துறைகளில், ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால், தற்போது பணிபுரிவோருக்கு, கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்

அரசு துறைகளில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டிய சூழல் உள்ள நிலையில், கடுமையான நிதி நெருக்கடி காரணமாகப் புதிய நியமனங்களை மேற்கொள்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின் இறுதியில் (மார்ச் நிலவரப்படி) மாநிலத்தின் மொத்தக் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியாக இருந்தது. இருப்பினும், தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த மே முதல் ஜூன் வரையிலான குறுகிய காலத்தில் மட்டும் ரூ.20,881 கோடி கடன் பெறப்பட்டது. அக்டோபர் மாதம் வரை பெறப்பட்ட கடனின் அளவு இருமடங்காக அதிகரித்துள்ளதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

நிதி நெருக்கடி

மகளிர் வெற்றி பயணம், அண்ணன் சீர் திட்டம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், மாணவர்களுக்கு நவீன சைக்கிள், இல்லத்தரசிகளுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் மானியம் என பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த தொடங்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல் புதிய தலைமைச் செயலகம் உட்பட, பலதிட்டப் பணிகளையும் தொடங்க வேண்டி உள்ளது. எனவே, கடன்சுமை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால்,

அரசு சந்தித்து வரும் தீவிர நிதி நெருக்கடி காரணமாக, தங்களுக்குச் சேர வேண்டிய பென்ஷன் (ஓய்வூதியம்) மற்றும் பணி நிறைவுப் பலன்கள் (Retirement Benefits) முறையாகக் கிடைக்குமா என்ற சந்தேகம் அரசு ஊழியர்கள் மத்தியில் வலுத்துள்ளது. இதன் காரணமாகவும், கடுமையான பணிச்சுமை காரணமாகவும் பணிக்காலம் முடிவதற்கு முன்பாகவே விருப்ப ஓய்வு (Voluntary Retirement - VRS) கோரி அரசிடம் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு வயதை உயர்த்த அரசு திட்டமா?

இது குறித்து, அரசு ஊழியர்கள் கூறுகையில்: விருப்ப ஓய்வில் செல்வதற்கான மனு கொடுத்து, 90 நாட்களுக்கு பின்னரே, அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை மனுவை திரும்ப பெற அவகாசம் கொடுக்கப்படும். தலைமைச் செயலகத்தில் மட்டும், நீர்வளத்துறை கூடுதல் செயலர் தொடங்கி, 25க்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வு கேட்டு மனு அளித்துள்ளனர். மாநிலம் முழுவதும் நுாற்றுக்கணக்கானோர் மனு அளித்துள்ளனர். இதனால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்த, அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Source: Read Full Article