தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஏராளமான அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதாவது மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் முதல் கிராம நிர்வாக அலுவலர்கள், பறக்கும் படையினர், கண்காணிப்புக் குழுவினர் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு மாத அடிப்படை சம்பளம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இதற்காக ரூ.198 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒவ்வொரு பிரிவில் பணியாற்றியவர்களுக்கும் அவர்களின் பொறுப்பு மற்றும் பணியின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்

மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர்கள், சிறப்பு வட்டாட்சியர்கள், தேர்தல் பணிக்கான துணை வட்டாட்சியர்கள், மண்டல அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்களுக்கான தொடர்பு அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அதிகபட்சமாக ரூ.45,000 வரை வழங்கப்படும். இதில் எது குறைவாக இருக்கிறதோ அது வழங்கப்படும்.

இதையும் படிங்க: TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?

யாருக்கு ரூ.30,000 கிடைக்கும்

மாவட்டத் தேர்தல் அலுவல பிரிவில் பணியாற்றி அலுவலர்கள், ஊழியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள், பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, மண்டல உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.30,000 வழங்கப்படும்.

ரூ.20,000

மாவட்ட ஆட்சியர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள், ஒருங்கிணைப்பு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஆட்சியர் அலுவலக வருவாய் பிரிவில் தேர்தல் பணியாற்றிய பிற பிரிவினருக்கு ரூ.20,000 வழங்கப்படும். மேலும் தேர்தல் தரவு இயக்குநர்களுக்கு ரூ.10,000, பிரிவு எழுத்தாளர்களுக்கு ரூ.7,500 வழங்கப்படவுள்ளது.

குஷியில் அரசு ஊழியர்கள்

ஏற்கனவே பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மதிப்பூதியம் வழங்கப்பட்டுள்ளதால் இரட்டிப்பு குஷியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

Source: Read Full Article