தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் முதலில் வருவது பட்டாசு.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்:

பட்டாசுகள் வெடித்து மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும் தொழிற்சாலைகள் கழிவுகள், வாகனங்கள் பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக உள்ள காற்று மாசு பட்டாசு வெடிப்பதன் காரணமாக பல மடங்கு அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று மழை விட்டு விட்டு நேற்று பெய்தபோதிலும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரோக்கியமற்றதாக மாறிய காற்றின் தரம்:

ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடியதால் சென்னையில் காற்றின் தரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் காற்றின் தரம் 187 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் 187 என்பது சுவாசிக்க ஆரோக்கியமற்றது என்று அர்த்தம் ஆகும்.

தீபாவளி பண்டிகை நாளான நேற்று இரவு 8 மணி முதல் 11.30 மணி வரை பொதுமக்கள் அதிகளவு பட்டாசுகளை வெடித்து கொண்டாடியுள்ளனர். சென்னையைப் பொறுத்தமட்டில் அபிராமபுரம், அச்சுதன் நகர், ஆழ்வார்நகர், அன்னை சத்யா நகர், அரும்பாக்கம், அரங்கநாதபுரம் ஆகிய பகுதிகளில் மிக மோசமாக காற்று மாது உருவாகியுள்ளது.

எங்கு மிகவும் மோசம்?

அபிராமபுரத்தில் காற்றின் தரம் 191 ஆக பதிவாகியுள்ளது. அச்சுதன் நகரில் 193 ஆக பதிவாகியுள்ளது. சென்னையிலே அதிகபட்சமாக ஆழ்வார் நகரில் 197 ஆக காற்றின் தரம் பதிவாகியுள்ளது. அரும்பாக்கத்தில் 183 ஆக காற்றின் தரம் பதிவாகியுள்ளது.

கணக்கீடுவது எப்படி?

காற்றின் தரம் 50 வரை இருந்தால் நல்லது ஆகும். 50 முதல் 100 வரை இருந்தால் ஓரளவு நல்லது ஆகும். 100 முதல் 150 வரை இருந்தால் இருந்தால் மோசம் என்று அர்த்தம் ஆகும். 150 முதல் 200 வரை இருந்தால் ஆரோக்கியமற்றது ஆகும். 200 முதல் 300 வரை இருக்குமானால் அது கடுமையான மோசம் என்று அர்த்தம். 300க்கு மேல் இருந்தால் அபாயகரமானது என்று அர்த்தம்.

டெல்லி படுமோசம்:

இந்திய அளவில் அகமதாபாத்தில் 195 என்ற மோசமான அளவை காற்றின் தரம் எட்டியுள்ளது. பெங்களூரில் 175 ஆகவும், ஹைதரபாத்தில் 179 ஆகவும் காற்றின் தரம் மோசமாகவே பதிவாகியுள்ளது. கொல்கத்தாவில் காற்றின் தரம் 189 ஆகவும், மும்பையில் காற்றின் தரம் 156 ஆகவும் பதிவாகியுள்ளது. இந்தியாவிலே மிகவும் மோசமான காற்றின் தரம் டெல்லியில் பதிவாகியுள்ளது.

அங்கு 895 ஆக காற்றின் தரம் பதிவாகியுள்ளது. புனேவில் காற்றின் தரம் 462 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் இந்த நவம்பர் மாதத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் 140 ஆக காற்றின் தரம் பதிவாகியிருந்தது. 1ம் தேதி 122 ஆகவும், நவம்பர் 2ம் தேதி 82 ஆகவும், 3ம் தேதி 98 ஆகவும், 4ம் தேதி 119 ஆகவும், 5ம் தேதி 71 ஆகவும், 6ம் தேதி 92 ஆகவும் பதிவாகியுள்ளது.

Source: Read Full Article