தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. பொங்கலுக்கு நிகராக தமிழ்நாட்டில் மிகவும் விசேஷமாக இந்த பண்டிகையை மக்கள் கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டிற்கான தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

தீபாவளி கொண்டாட்டம்:

கடந்த ஒரு மாத காலமாகவே தீபாவளி கொண்டாட்டத்திற்கான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில், இ்ன்று மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். காலையிலே எழுந்து பட்டாசுகள் வெடித்து தங்களது கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து புத்தாடைகள் அணிந்து மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், குடும்பத்தினர், உறவினர்கள் என ஒருவருக்கு ஒருவர் மாறி, மாறி வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

சொந்த ஊரில் மக்கள்:

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என பெருநகரங்களில் கல்வி மற்றும் வேலைக்காக வசித்து வரும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் சுமார் 3 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இன்று அதிகாலையிலும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

தீபாவளி பண்டிகை என்றாலே இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். கோழி மற்றும் ஆடு இறைச்சிகள் விற்பனை அதிகாலை முதலே படுஜோராக ஒரு பக்கம் விற்பனை நடந்து வருகிறது. மேலும், வீடுகளில் பொதுமக்கள் படையலிட்டு வணங்குவது வழக்கம் என்பதால் கடைகளில் பூஜைக்கான வாழை இலை, பழங்கள், பூக்கள் போன்றவையின் விற்பனையும் மிகவும் ஜோராக நடந்து வருகிறது.

முன்னேற்பாடுகள்:

இதுமட்டுமின்றி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள் என்பதால் அசம்பாவிதத்தை தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீக்காய பிரிவுகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோயில்களிலும் கூட்டம்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மிகவும் கவனத்துடன் பட்டாசு வெடிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை, திருச்செந்தூர் போன்ற முக்கியமான கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அலைமோதி வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புதியதாக திருமணம் செய்தவர்கள் ஜோடிகளாக தலை தீபாவளி கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று மட்டுமின்றி நாளையும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால் இரண்டு நாள் கொண்டாட்டமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், இன்றும் பல இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்று கருதப்படுகிறது. இதனால், தீபாவளி கொண்டாட்டம் தடைபடுமா? என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் . தென்தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் தீீபாவளி கொண்டாட்டத்தில் சிரமம் அடைந்துள்ளனர்.

Source: Read Full Article